அஸ்வின்ஸ் விமர்சனம்
வளர்ந்து வரும் யூடியூபர்கள், மர்ம பங்களா, ஒரு பேய்- இது தான் தற்போது வரும் ஹாரர் படங்களின் ஒன் லைன் கதை. வசந்த் ரவி நடித்திருக்கும் அஸ்வின்ஸ் படத்தின் கதையும் அது தான். ஆனால் அதை படமாக்கிய விதம் பார்க்கும்படி இருக்கிறது.இந்தியாவில் வசிக்கும் அர்ஜுன்(வசந்த் ரவி), ரித்து (சரஸ்வதி மேனன்), கிரேஸ்(சிம்ரன் பரீக்), வருண்(முரளிதரன்), ராகுல்(உதயதீப்) ஆகிய 5 பேர் லண்டனில் இருக்கும் மர்ம பங்களா குறித்து ஆராய்ந்து வீடியோ எடுத்து வெளியிட வேண்டும் என வேலை கொடுக்கப்படுகிறது. தொல்லியல் துறை நிபுணரான ஆர்த்தி ராஜகோபாலுக்கு(விமலா ராமன்) சொந்தமான பங்களா அது.
ஆபத்துகள் குறித்து தெரிந்தும் அந்த 5 பேரும் லண்டனில் இருக்கும் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு சென்ற பிறகு ஒவ்வொருவரும் பயப்படத் துவங்கிறார்கள். அங்கு நடக்கும் சம்பவங்கள் அவர்களை மிரள வைக்கிறது.
ஆனால் அர்ஜுன் தன் நண்பர்களை காப்பாற்றுகிறார். தொழில்நுட்ப ரீதியாக அஸ்வின்ஸ் படத்தை பாராட்டியே ஆக வேண்டும்.அந்த ஒரு காரணத்திற்காகவும் ஹாரர் பட விரும்பிகளுக்கு அஸ்வின்ஸை பிடிக்கும். சவுண்ட் மிக்ஸிங் தியேட்டரில் இருக்கும் நம்மை அவ்வப்போது பயப்பட செய்கிறது. அந்த 5 பேரில் ஒருவர் சவுண்டு என்ஜினியர். அவர் இந்த மர்ம பயணத்தில் வரும் அனைத்து விதமான் ஒலிகளையும் கேப்ச்சர் பண்ண வேண்டும். முதல் பாதில் அந்த அளவுக்கு பலமாக இல்லை.
ஆர்த்தி ராஜகோபாலின் கடந்த காலத்தை விவரிக்க இயக்குநர் தருண் தேஜா ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார். காஞ்சிபுரம் அருகில் இருக்கும் சிறு ஊருக்கு ஆர்த்தி சென்ற பிறகு அவர் வாழ்வில் ஏற்படும் விஷயங்களை விரிவாக காட்டியிருக்கிறார் தருண்.
முதல் பாதி ஹாரர் என்றால், இரண்டாம் பாதி சைக்காலஜி த்ரில்லராக இருக்கிறது. அது படத்திற்கு கை கொடுக்கவும் செய்துள்ளது, மைனஸாகவும் இருக்கிறது. ஒரு எழுத்தாளராக தருண் தெளிவாக இருக்கிறார். ஆனால் அதை சினிமா மொழியில் ரசிகர்களுக்கு புரியும்படி இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் படம் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
வசந்த் ரவி மீண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் கண்களில் தெரியும் பயத்தை பார்த்து நமக்கும் பயம் வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார். இயக்குநர் ராஜீவ் மேனனின் மகளான சரஸ்வதி முதல் படத்திலேயே திறம்பட நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் வரும் விமலா ராமனும் நன்றாக நடித்திருக்கிறார்.
ஐடியாக்களை பொறுத்தவரை அஸ்வின்ஸ் சுவாரஸ்யமான படம். ஆனால் ஐடியாக்கள் ஒன்றாக சேர்ந்து முழுமை பெறவில்லை.