Now Reading
ஐந்தாம் வேதம் இணையத் தொடர் விமர்சனம்

ஐந்தாம் வேதம் இணையத் தொடர் விமர்சனம்

ரிக்வேதம், சாமவேதம், யஜுர்வேதம் மற்றும் அதர்வவேதம் ஆகிய நான்கு வேதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஐந்தாவது வேதம் ஒன்று இருக்கிறது என்றும், அதன் மூலமாகவே பிரம்மன் மனிதர்களை படைத்தார், என்ற கற்பனையை புராணம் மற்றும் அறிவியலோடு இணைத்து சொல்லியிருக்கும் மர்மம் மற்றும் திரில்லர் இணையத் தொடர் ‘ஐந்தாம் வேதம்’.

தென் தமிழகத்தில் இருக்கும் மிக பழமையான சிவாலயத்தில் ரகசிய இடத்தில் இருக்கும் ஐந்தாவது வேதம் வெளி வரவேண்டிய நாளுக்காக அந்த கோவில் பூசாரி காத்துக் கொண்டிருக்க, அதே வேதத்தின் மூலம் இந்த உலகத்தில் மனிதர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறிவியல் துறையைச் சேர்ந்த சிலர் ஐந்தாவது வேதத்தை தேடுகிறார்கள். மறுபக்கம், மாமிசத்தை கொண்டு 3டி பிரிண்ட் மூலம் அப்படியே அசல் மாமிசத்திலான உருவத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு கூட்டம் ஈடுபடுகிறது. அவர்களும் ஐந்தாம் வேதத்தை கைப்பற்ற முயற்சிக்க, இறுதியில், ஐந்தாம் வேதம் ஒன்று இருப்பது உண்மையா?, அதை தேடுபவர்கள் கண்டுபிடித்தார்களா?, அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆகியவற்றை மர்மம் நிறைந்த காட்சிகளோடும், சுவாரஸ்யமான திரைக்கதையோடும் சொல்வதே ‘ஐந்தாம் வேதம்’.

ஐந்தாம் வேதம் என்ற ஒன்றை இயக்குநர் நாகா கற்பனையாக உருவாக்கியிருந்தாலும், அதனை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு புராணம் மற்றும் அறிவியல் இரண்டையும் இணைத்து வடிவமைத்த காட்சிகள் அனைத்தும் சஸ்பென்ஸாக பயணிப்பதோடு, லாஜிக்கோடும் பயணித்திருப்பது இத்தொடரின் மிகப்பெரிய பலம்.

முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிரிஷ் குரூப், ராம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்தீவ் வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தொடர் முழுவதும் பயணித்து திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜன், மர்மம் மற்றும் திகில் காட்சிகளை பகல் நேரத்தில் படமாக்கினாலும் அதன் மூலம் பார்வையாளர்களை பதற்றமடைய செய்து விடுகிறார்.

ரேவாவின் பின்னணி இசையில் ஐந்தாம் வேதத்தின் தேடல் காட்சிகள் அனைத்தும் திக்..திக்…நிமிடங்களாக பயணிக்கிறது.படத்தொகுப்பாளர் ரஜீஷ்.எம்.ஆர், புராணம் மற்றும் அறிவியல் இரண்டோடு ஒன்றை ஒற்றுமைப்படுத்தும் கதையையும், அதைச் சார்ந்து நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்களுக்கு தெளிவாக புரியும்படி காட்சிகளை தொகுத்திருப்பதோடு, ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்த அத்தியாயம் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

See Also

கலை இயக்குநர் ஏ.அமரனின் பணி படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. கோவிலில் காட்சிகளை படமாக்கினாலும் அங்கிருக்கும் பொருட்களை வடிவமைத்த விதம், பாதள அறை, வீடுகளில் இருக்கும் ரகசிய வழி உள்ளிட்ட அனைத்தையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்.’மர்ம தேசம்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நாகா, ஐந்தாம் வேதம் என்ற தனது கற்பனைக்கு புராணம் மற்றும் அறிவியல் மூலம் உயிரோட்டம் அளிக்கும் வகையில் அனைத்து அத்தியாயங்களையும் மிக சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். படத்தில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரையும் சரியான முறையி பயன்படுத்தியிருப்பதோடு அவர்கள் படம் முழுவதும் வருவது போல் காட்சிகளை வடிவமைத்திருப்பவர், தொடரின் மொத்த அத்தியாயங்களையும் எந்த வித கவனச்சிதறல் இல்லாமல் ரசிகர்கள் பார்க்கும்படி சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.

ஐந்தாம் வேதம் என்ற புராணக் கதையோடு, தற்போதையக் காலக்கட்டத்தில் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ’செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை மிக நுட்பமாக இணைத்து, இப்படியும் நடக்குமா..? என்று நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.முதல் இரண்டு அத்தியாயங்கள் நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பது போல், அடுத்தடுத்த சில அத்தியாயங்கள் செய்யவில்லை என்றாலும், இயக்குநர் நாகா மேற்கொண்டிருக்கும் ஆய்வுகள், அதனை திரை மொழியில் சொன்ன விதம் அனைத்தும் தொடரில் இருக்கும் குறைகளை மறந்து நம்மை ரசிக்க வைக்கிறது. அதே சமயம், பல இடங்களில் கதாபாத்திரங்கள் அதிகம் பேசுவது ஏதோ தொலைக்காட்சி தொடர் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. இருந்தாலும், ஐந்தாவது அத்தியாயத்தில் வேதம் எங்கிருக்கிறது, என்பது தெரிந்து அதை கைப்பற்றுவதற்காக வரும் புதிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பின்னணி மூலம் மீண்டும் வேகம் எடுக்கும் தொடர், இறுதியில் திருப்பங்கள் மூலம் நம்மை கட்டிப்போட்டு கதையோடு ஒன்றிவிடச் செய்கிறது.

மொத்தத்தில், ‘ஐந்தாம் வேதம்’ மர்மம் மற்றும் திகில் அனுபவத்தை கொடுப்பதோடு புராணத்திற்கும், அறிவியலுக்கும் இருக்கும் பிணைப்பை பற்றி யோசிக்க வைக்கிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)