அகிலன் விமர்சனம்
பொன்னியின் செல்வன் ஹிட் அடித்த கையோடு ஜெயம் ரவி நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் அகிலன். ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், ஜிராக் ஜானி, தருண் அரோரா உள்ளிட்ட நிறைய பட்டாளங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்தை, பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் ஜெயம் ரவி.
ஹார்பரில் முறைகேடாக நடக்கும் அனைத்து கடத்தல்களுக்கும் நங்கூரமாய் இருக்கிறான் அகிலன். இவைகள் அனைத்திற்கும் தலைவன் கபூர். அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அகிலன் அவனை சந்திக்க, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவனை நாடு கடத்தும் அசைமெண்ட் அவனிடம் கொடுக்கப்படுகிறது. இதற்கிடையே அகிலனின் ஆட்டத்தை அடக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி பல்வேறு முயற்சிகளை செய்து அகிலனை கைது செய்ய நினைக்கிறான். இறுதியில் அகிலன் அந்த அசைமெண்டை முடித்தானா? அதற்கு பின்னால் அவன் வைத்திருக்கும் மாஸ்டர் பிளான் என்ன?
அகிலனை அடக்க நினைத்த அதிகாரிக்கும், அவனுக்கும் இடையேயான முட்டல் மோதல் எங்கு போய் முடிந்தது? என்பதே படத்தின் கதை. படத்தின் லொக்கேஷன் அனைத்துமே கண்ணுக்கு விருந்தளிக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹார்பர், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடற்கரையும், அதனை சார்ந்த இடங்களிலும் காட்சிகள் அமைந்து இருந்தது புது வித அனுபவம்.
அகிலனாக ஜெயரவி; அலட்டி கொள்ளாத நடிப்பு அற்புதம். கதாபாத்திரமாகவே ஒன்றிவிட்டார். கேள்வி எழுப்ப முடியாத அளவிற்கு படத்தில்அவ்வளவு டீடெய்லிங். அதனால் கதை இன்னதென்று உடனே கணிக்க முடிய வில்லை என்றாலும் படத்தின் திரைக்கதை நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்து விடுகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசை, மிரட்டுகிறது. கதையோடு கலக்கிறது.
படத்தில் பலவீனம் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. டூயட், ரொமான்ஸ் என்று எதிர்பார்த்து வந்தால், அதற்கு வாய்ப்பில்லை. அதனாலேயே என்னவோ பிரியா பவானின்ஷங்கருக்கு பெரிதாக வேலையில்லை. அவருக்கே வேலையில்லாத போது, தன்யா ராஜேந்திரனுக்கு மட்டும் வேலையா இருக்கப் போகிறது.
அருள்மொழி வர்மனுக்கு அடுத்த ஹிட் என்று கூட கூறலாம், அந்த அளவில் தான் திரைக்கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.