தண்டேல் திரை விமர்சனம்!

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் படம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி படத்துடன் வெளியான இந்த படத்திற்கு தமிழகத்தில் தியேட்டர்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டிருந்தன. நாக சைதன்யா படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது என்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி தவிர பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா ஆகியோர் நடித்துள்ளனர். ஷ்யாம் தத் ( ISC) ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பும், கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளனர்.
தெலுங்கு தேசத்தில் இருக்கும் மீனவர்கள் குஜராத்திற்கு 9 மாத ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்க செல்கின்றனர். கடலில் ஒன்பது மாதங்களும் சொந்த ஊரில் மூன்று மாதங்களும் வாழ்ந்து வருகின்றனர். சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா சிறுவயதில் இருந்து ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். இது அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரிகிறது. இந்நிலையில் கடலில் மீன் பிடிக்கும் போது திடீரென்று சூறாவளி ஏற்பட்டு பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நாக சைதன்யா உட்பட 22 பேர் சென்று விடுகின்றனர். பிறகு பாகிஸ்தான் அரசு அவர்களை சிறையில் அடைகிறது, அதன் பிறகு சாய் பல்லவியின் உதவியுடன் அவர்கள் எப்படி நாடு திரும்பினார்கள் என்பதே தண்டேல் படத்தின் கதை.
நடிகர்கள் :
நாக சைதன்யாவை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டுவதற்கு படத்தில் நிறைய காட்சிகளை வைத்துள்ளனர். அவற்றில் ஒரு சில காட்சிகள் நன்றாக வொர்க் ஆகியுள்ளது, ஒரு சில காட்சிகள் பில்டப் ஆக மட்டுமே தெரிகிறது. ஒரு மீனவனாக நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். உடல் எடையை ஏற்றி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். மறுபுறம் சாய் பல்லவி வழக்கம் போல தனது காதலை கொட்டி தீர்த்துள்ளார். அமரன் படத்தை போலவே தண்டேல் படத்திலும் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை புரிந்து கொண்டு நன்றாக நடித்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பதில் சாய் பல்லவிக்கு தான் அதிக ஸ்கோப் உள்ளது.
இவர்களை தாண்டி படத்தில் நடித்துள்ள கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். இவர்களில் கருணாகரன் மட்டும் சற்று தனியாக தெரிகிறார். படம் ஆரம்பித்து இடைவெளி வரை பெரிதாக எங்கும் போர் அடிக்கவில்லை. காதல் காட்சிகளே என்றாலும் அவற்றை ரசிக்கும் படி எடுத்திருந்தனர். ஆனால் இரண்டாம் பாதியில் தான் படத்தின் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அதுவும் குறிப்பாக பாகிஸ்தான் சிறையில் நடக்கும் படி காட்டப்படும் காட்சிகள் ஏதும் நம்பும்படியே இல்லை. தேசியக் கொடியை வைத்து வரும் காட்சிகள் எதுவுமே ஒர்க் ஆகவில்லை.
மேலும் படத்தின் நீளமும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு 30 நிமிடத்தை எப்படியாவது கட் செய்து இருந்தால் இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும். தேவி ஸ்ரீ பிரசாத் நீ இசையில் பாடல்கள் ரசிக்கும் படி இருந்தது, பின்னனி இசை ஒரு சில இடங்களில் அதிக சத்தத்துடன் இருந்தது. VFX காட்சிகளும் ஒரு சில இடங்களில் நன்றாகவே இருந்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள தண்டேல் திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்திருந்தாலும் அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்க தவறி உள்ளது.