Now Reading
Ramayana: The Legend of Prince Rama Review

Ramayana: The Legend of Prince Rama Review

ஜப்பானிய இயக்குநர் யூகோ சாகோ, 1993 இல் உருவாக்கிய 2டி அனிமேஷன் படத்தை, 4K மாஸ்டெரிங் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர் கீக் பிக்சர்ஸ். ஒரு ஜப்பானியரின் பார்வையில் ராமாயணத்தைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. உதாரணத்திற்கு, அனுமன் கடலின் மீது பறக்கும் போது சிம்ஹிகா எனும் ராட்சசி, அனுமனை விழுங்கி விட்டதாகப் புராணக்கதையில் வரும். அதே போல், சுரஸா எனும் ராட்சசி பறக்கும் சக்தியுள்ள ஊர்வன ஜந்துக்களின் தாய் என அழைக்கப்படுபவரும், அனுமனை வழி மறிப்பார். சிம்ஹிகாவின் வயிற்றுக்குள் புகுந்து வயிற்றைக் கிழித்து வெளியேறும் அனுமன், சுரஸாவின் வாய்க்குள் புகுந்து உடலைச் சின்னதாக்கி சட்டென வெளியில் வந்துவிடுவார். யூகோ சாகோ-வோ, இலங்கைப் பயணத்தில் அனுமன் எதிர்கொள்ளும்ருகத்தை டிராகனாகக் காட்டியுள்ளார். டிராகனைக் கண்டம் துண்டமாக வெட்டிவிட்டுப் பயணப்படுகிறார் அனுமன்.

இராவணின் படைகள் மட்டுமல்லாமல், பொதுவாகவே ராட்சசர்கள், பறக்கும் சக்தியுள்ள வவ்வால் மனிதர்கள் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். வானரப்படையை அழகான குரங்குகளின் படையாகவே காட்டியுள்ளனர். அனுமன், சுக்ரீவன், அங்கதன், நீலன் மட்டுமே வானரங்களாக நிமிர்ந்து நிற்கின்றனர். இன்னொரு அதி சுவாரசியம், இலட்சுமணன் கையால் இறப்பதை இழுக்கு எனக் கருதி, இந்திரஜித் தற்கொலை செய்வது போல் சித்தரித்துள்ளனர்.

ராமாயணத்தால் ஈர்க்கப்பட்ட யூகோ சாகோ, ராமாயணக் காவியத்தை அனிமேஷன் படமாக எடுக்க ஆசைப்படுகிறார். இந்தியக் கடவுள் பற்றி ஒரு வெளிநாட்டினன் ஒருவன் படமெடுப்பதா என 1989 இல், விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஜப்பானில் அனிமேஷன் என்பது மிக உயரிய கலை. ராமக்காதையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு வாய்ப்பாக அமையும்’ எனச் சொல்லித் தனக்கு முட்டுக்கட்டை போட்டவர்களை எல்லாம் சம்மதிக்க வைக்கிறார் யூகோ சாகோ.

யூகோ சாகோவின் ராமாயணத்தில் சர்ச்சையான எந்தப் படலமும் இடம்பெறாமல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது (அல்லது தற்போதைய வெர்ஷனில் நீக்கப்பட்டிருக்கலாம்). வாலியைக் கொல்லும் படலம் இல்லை, சீதையின் அக்னிப்பிரேவசம் இல்லை, ராம – லட்சுமணர்கள் கடத்தப்படும் மயில் ராவணன் படலம் இல்லை. படத்தில் இன்னொரு சுவாரசியம், மாபெரும் வில்லாளியாகக் கருதப்படும் ராமர், கும்பகர்ணனை வாளாலும், ராவணனை சக்கராயுதத்தாலும் கொல்கிறார். ராமாயணத்தின் அழகே, அது பெறும் இத்தகைய பல்வேறு வடிவங்களே!

See Also

ஒரு கடவுள் பாத்திரத்தை, மனிதரைக் கொண்டு நடிக்க வைக்கும் லைவ்-ஆக்ஷனாக எடுக்கக்கூடாது என முடிவெடுத்து, 2டி அனிமேஷன்க்குச் சென்றுள்ளார் யூகோ சாகோ. படத்தின் அழகே, ஜப்பானிய அனிம் (Anime) பாணியிலான பின்னணிக் காட்சிகளே! ரம்மியமான வண்ணக் கலவையில் மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. ராமரோடும் சீதையோடும், மான்கள், பறவைகள், அணில்கள், முயல்கள், பறவைகள் கொண்டுள்ள உறவு ரசிக்க வைக்கின்றன. தங்கள் குடிலுக்குள், மேற்கூறிய விலங்கினங்களுக்கும் இலை போட்டு, உடன் அமர்ந்து உணவருந்துகின்றனர். அனுமனைக் கோபமானாகவும், ராமரைப் போர்க்கடவுளாகவும் வெஞ்சினத்துடன் சித்தரிக்கும் போக்கு மிகுந்துள்ள இக்காலகட்டத்தில், ராமனைக் கருணாமூர்த்தியாக ஒரு ஜப்பானியர் சித்தரித்துள்ளது உவகையை அளிக்கின்றது. ராவண வதம் கூட வெறுப்புணர்ச்சியாலான சித்தரிப்பாக இல்லாமல், ராவணனின் உடல் மண்ணில் சாய்ந்ததும், அவர் உடல் மண்ணாலும், பச்சைப்பசேலென்ற புற்களாலும் மூடப்பட்டு, அதன் மேல் ஒரு மரம் பூத்துக் குலுங்குகிறது. இப்படியொரு கவித்துவமான அழகியல் அனிமேஷன் படங்களில் மட்டுமே சாத்தியம்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)