நந்தன் விமர்சனம்

‘வழக்கமான’ சசிகுமாரிலிருந்து முற்றிலும் விலகி, வேறு ஒரு பரிமாணத்தைக் கொண்டு வர மெனக்கெட்டிருக்கிறார் சசிகுமார். எந்நேரமும் வெற்றிலையை மென்றுகொண்டேயிருப்பது, ஒழுங்கற்ற நடையும், கோப்புலிங்கத்தின் சொல்லுக்கு எள்ளென்றால் எண்ணெய்யாக இருப்பதும் எனப் புதிய பரிணாமத்தில் உடல்மொழியால் கவனிக்க வைக்கும் சசிகுமார். இடையிடையே ‘வழக்கமான’ சசிகுமாரின் உடல்மொழி, வசன உச்சரிப்பால் அக்கதாபாத்திரத்திலிருந்து பார்வையாளர்களை விலகவும் வைக்கிறார். அதிகாரத் திமிரில் மிரட்டியெடுக்கும் கோப்புலிங்கம் கதாபாத்திரம் வழக்கமான அரசியல் வில்லனாக வந்தாலும், சின்ன சின்ன மேனரிஸத்தாலும், நக்கலாலும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். சமுத்திரக்கனி சமுத்திரக்கனியாகவே வந்து கதாநாயகனுக்கும் கதைக்கருவிற்கும் ‘ஊக்கம்’ தருகிறார். ஸ்ருதி பெரியசாமியும், ‘கட்டெறும்பு’ ஸ்டாலினும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்திருக்கிறார்கள்.

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும், நெல்சன் ஆண்டனியின் படத்தொகுப்பும் தேர்ந்த தொழில்நுட்ப பங்களிப்பைப் படத்திற்கு வழங்கத் தவறியிருக்கின்றன. முக்கியமாக, பழைமையான திரைமொழியைக் கொண்ட காட்சிகளிடம் கண்டிப்பைக் காட்டாமல், அவற்றை மேலும் பழைமையாக மாற்றியிருக்கிறது படத்தொகுப்பு. ஜிப்ரான் வைபோதாவின் இசையில் எராவியின் வரிகளில் ‘எக்கி எக்கி பாக்குற’ பாடல் மட்டும் காதுகளை இதமாகத் தீண்டுகிறது. பின்னணி இசையால் சில காட்சிகளை மட்டும் காப்பாற்ற முயன்றிருக்கிறார் ஜிப்ரான்.

தனித் தொகுதிகளில் அதிலும் ஊரக உள்ளாட்சியமைப்புகளிலுள்ள தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஏற்படும் தீண்டாமைகளையும், அவர்கள் படும் வலிகளையும் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். ஆனால், அதற்காக அவர் இயற்றியிருக்கும் கதாபாத்திரங்களும், அவர்களின் வாழ்வியலும் செயற்கைத்தனமாகவே இருக்கிறது. முக்கியமாக, ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்சிப்படுத்திய விதம் சிக்கலாக மாறியிருக்கிறது. ஒருபக்கம் அவர்களின் வாழ்வியலில் உள்ள கஷ்டங்களைக் கேளிக்குள்ளாக்குகிறார். மறுபக்கம் அவர்களின் அசுத்தமான உடைகள் தொடங்கி, ஒழுங்கில்லாத உடல்மொழி அவரை எல்லாவற்றிலும் கழிவிரக்கத்தைக் கொண்டு வர முயல்கிறார். அதேபோல், பிரதான கதாபாத்திரமான சசிகுமாரும் ஒரு காட்சியில் தன் உடல்மொழியாலும், பேச்சாலும் அப்புராணியாகத் தெரிய, அடுத்தக்காட்சியிலேயே தெளிவான அரசியல் பேசும் நபராகவும் இருக்கிறார். மீண்டும் அடுத்தக்காட்சியில் அப்புராணியாக மாறிவிடுகிறார். இத்தகைய மாற்றங்களால் அந்தப் பாத்திரத்தோடு ஒன்ற முடியாமல் போகிறது.

திரைக்கதையும் இதே பேடர்னிலேயே நகர்கிறது. பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு நியாயம் செய்யும் காட்சிகள் இல்லை என்பதால் பார்வையாளர்களை உலுக்கி எடுக்க வேண்டிய காட்சிகள் திரையில் வரிசையாக நடைப்பயிற்சி மட்டுமே செய்கின்றன. புதுமையில்லாத மேம்போக்கான திரையாக்கமும், திரைமொழியும் மேலும் பார்வையாளர்களைத் திரையிலிருந்து விலக வைக்கிறது. சமகால அரசியல் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகள் மீதான நக்கல்கள், ஆதிக்கச் சாதிகளின் வஞ்ச அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் ஒன்லைன்கள் என அரசியல் நையாண்டி வசனங்களும் மேலோட்டமாகவே வந்துபோகின்றன.

இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்களும், அதற்கான காரணங்களும் சுவாரஸ்யம் தருகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு, அவரின் அலுவலக இருக்கையில் அமர்வது தொடங்கி, தேசியக் கொடியேற்றும்போது வரை நடக்கும் தீண்டாமைகளைச் சமரசமின்றி காட்சிப்படுத்தியிருக்கிறது படம். இறுதிக்காட்சியில் கதாநாயகன் எடுக்கும் அரசியல் ரீதியிலான தெளிவான முடிவு படத்தின் ஆன்மாவையும், சமூகம் மற்றும் மக்கள் மீதான நம்பிக்கையையும் பேசுகிறது. இறுதிக்காட்சிகளுக்குப் பின் வரும் ஆவணத் தொகுப்பு முழுமையின்மையாகவும் அவநம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருந்தாலும், நிதர்சனத்தைப் பதிவு செய்யும் முயற்சியாகப் பாராட்ட வைக்கிறது.

See Also

 

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)