சொல்லப்படாத தமிழர்களின் வலி, கதி கலங்க வைத்த விக்ரம்.. ஆஸ்கரை தட்டுமா தங்கலான்.?
பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த இரு வருடங்களாக செதுக்கப்பட்ட தங்கலான் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி இருக்கிறது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் நடித்திருக்கும் இப்படத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தது.
கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மக்களின் வலி, வேதனை, சொல்லப்படாத உண்மை ஆகியவற்றுக்கு விக்ரம் மூலம் உயிர் கொடுத்துள்ளார் ரஞ்சித். தற்போது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்று வரும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் குழுவாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பண்ணையாரின் கீழ் வேலை செய்யும் இவர்களை பிரிட்டிஷ்காரர் ஒருவர் தன் வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். அதாவது அவர்கள் இடத்தில் தங்கம் இருப்பதை தெரிந்து கொள்ளும் அவர் மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி தன் பக்கம் இழுக்கிறார்.
அடிமை வாழ்க்கை வாழ்வதைவிட என்னிடம் சுகபோகமாக வாழலாம் என்று சொல்லும் அந்த வார்த்தையை நம்பி விக்ரம் மற்றும் அவருடைய மக்கள் தங்கம் தேடும் வேலைக்கு செல்கிறார்கள். அந்த முயற்சி வெற்றி பெற்றதா? மக்களுக்கு என்ன நேர்ந்தது? ஆரத்தி யார்? விக்ரமின் போராட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த தங்கலான்.
விக்ரம் என்னும் மகா கலைஞனின் நடிப்பை நாம் வியக்காத படங்களே கிடையாது. ஆனால் இந்த தங்கலானில் அவர் காட்சிக்கு காட்சி மிரட்டி கதி கலங்க வைத்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் இன்னமும் அந்த தாக்கத்திலிருந்து வெளிவரவில்லை.
மேலும் இப்படத்திற்காக அவர் கொடுத்த அர்ப்பணிப்பு உழைப்பு மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதேபோல் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரங்களும், நடிப்பும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. அந்த வகையில் ரஞ்சித் கதாபாத்திரங்களின் தேர்வை கச்சிதமாக கையாண்டுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக ஜிவி பிரகாஷ் படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்லலாம். ஏற்கனவே பாடல்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது அதை தொடர்ந்து படத்தில் கதையோடு பயணிக்கும் பின்னணி இசையும், இடைவேளை காட்சியில் வரும் அந்த பிஜிஎம் என அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது.
இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் ரஞ்சித் எந்த மாதிரியாக இந்த கதையை கொண்டு சென்றுள்ளார் என்பதில் சிறு குழப்பம் ஆடியன்ஸுக்கு வருகிறது. அதே போல் படம் முடிந்த பிறகும் சில கேள்விகள் மூளையை குடைகிறது. அதற்கான தெளிவான விளக்கத்தை இயக்குனர் சரியாக கொடுக்கவில்லை.
ஆனால் அதை எல்லாம் தாண்டி தமிழர்களின் சொல்லப்படாத வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ரஞ்சித். அதற்கு உயிர் கொடுத்திருக்கும் விக்ரம் இதன் மூலம் பல விருதுகளை தட்டி தூக்கி விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் தங்கலான் – விசுவல் ட்ரீட்