ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த செல்வராகவன்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் செல்வராகவன் முக்கியமான இயக்குநராக மாறினார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இயக்கத்திலிருந்து ஒதுங்கி நடிப்பில் கவனம் செலுத்துகிறார். இப்போது அவர் ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வராகவன் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்களை ஏதோ ஒருவகையில் ஈர்த்தது.இயக்கத்தில் பிஸியாக இருந்த அவர் திடீரென நடிகரானார். அந்தவகையில் அவர், பீஸ்ட், சாணிக்காயிதம், பகாசூரன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக ராயன் படம் ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்களை இயக்கவிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கிய நானே வருவேன் படம் தோல்வியை சந்தித்தது. செல்வராகவன் அட்வைஸ்: இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வதிலும் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். அந்தவகையில் இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கும் அவர், ”நமது மனதை சுடுகாடாக மாற்றுவது, நம்மிடமிருந்து சந்தோஷத்தை பறிப்பது எதனாலோ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். கடந்த காலம்: நாம் நமது கடந்த காலத்தை பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டால் நம்முடைய மனசாட்சி அமைதியாகிவிடும். நான் ஏன் கடந்த காலத்தை பற்றி சொல்கிறேன் என்றால் நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தில் கடந்த காலத்தை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறோம். அந்த கடந்த கால நிகழ்வுகளை பொறுத்தவரை அதன் நினைவுகள் நிகழ்காலத்தில் பெரிய விஷயமாக நமக்கு தெரியும். கடந்த காலத்தை பற்றி நினைப்பதில் இருக்கும் பிரச்னை அதுதான். ஒரு டெக்னிக் இருக்கு: அதிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு டெக்னிக்கை நான் சொல்கிறேன். எப்போதெல்லாம் உங்களுக்கு கடந்த கால நினைவுகள் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம், ‘இப்போது, இப்போது’ என்ற எண்ணத்தை ஆழமாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்களது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதில் அது உங்கள் கவனத்தை செலுத்தவைக்கும். அது உங்களை நிகழ்காலத்துக்கு அழைத்து வரும். ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாக இருப்பது போல் இருக்கலாம். ஆனால் கொஞ்சம் பழக பழக கைவசப்பட்டுவிடும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்யும்போது ஒரு நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.