யோகிபாபு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா
நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். லொள்ளு சபாவில் தலை காட்டி பிறகு சினிமாவுக்குள் வந்து காமெடி நடிகராக வலம் வந்த அவர் இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார். இந்தச் சூழலில் யோகிபாபு ஒருநாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதனை கேட்ட ரசிகர்கள் வாயை பிளந்திருக்கின்றனர்.கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது.அந்தப் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறந்து போக, சந்தானம் ஹீரோவாக மாற என காமெடிக்கென வெற்றிடம் உருவானது. அதனை யோகிபாபு நிரப்பினார்.காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் ரத்னம் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஹீரோவாக நடித்தாலும் காமெடிக்கு யோகிபாபுவை இயக்குநர்கள் தேடத்தான் செய்கிறார்கள் என்பதை அந்தப் படங்கள் உணர்த்தின.ஒருபக்கம் ஹீரோவாக இருந்தாலும் காமெடியனாகவும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். பொதுவாக ஹீரோ ஆசை வந்துவிட்டால் காமெடியை மறந்துவிடுவார்கள்; அப்படி இல்லையென்றால் அவர்கள் செய்யும் காமெடி சிரிப்பு வரவைக்காது என்ற கருத்து உண்டு. ஆனால் யோகிபாபுவோ மாவீரன், ஜெயிலர், ரத்னம், அரண்மனை 4 ஆகிய படங்களில் ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்கவே வைத்தார் என்பது கவனிக்கத்தக்கது.யோகிபாபுவின் நடிப்பில் அடுத்ததாக கங்குவா, GOAT, அந்தகன் என ஏராளமான படங்கள் வரவிருக்கின்றன. இன்றைய தேதியில் அதிக பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் யோகி. இந்நிலையில் அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி அவர் ஒரு நாளைக்கு 12 லட்சம் ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது ஒருநாளைக்கு 12 லட்சமா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.