சீரியலில் களமிறங்கும் சிம்ரன் …ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சிம்ரன் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர். அவர் பீக்கில் இருந்தபோது நடிக்க வந்த நடிகைகள் அனைவருமே எப்படியாவது சிம்ரன் மாதிரி வளர்ந்துவிட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார்கள். பப்ளியாக இருந்தால்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளை கொண்டாடுவார்கள் என்ற டெம்ப்ளேட்டை அடித்து நொறுக்கி ஸ்லிம்மாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவரலாம் என்ற புது விஷயத்தை கோலிவுட்டுக்கு சொல்லிகொடுத்தவர் சிம்ரன். இந்த சூழலில் அவர் பற்றிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் சிம்ரன். இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்தப் படம்தான் நியூசிலாந்தில் முதன்முறையாக ஷூட் செய்யப்பட்ட இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்ற சூழலில் சூப்பர் ஹிட் முக்காபுல்லா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனின் கண்களில் சிம்ரன் பட அவரது வாழ்க்கை மாறியது
அதன்படி 1996ஆம் ஆண்டு அமிதாப்பின் கம்பெனி தயாரித்த தெரெ மெரே சாப்னே படத்தில் ஹீரோயினாக மாறினார் சிம்ரன். அவருக்கு மிகச்சிறந்த பெயரை அந்தப் படம் பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து தமிழில் விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற மின்னல் ஒரு கோடி பாடலில் சிம்ரனின் நடனத்தையும், அழகையும் பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயினர். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வெளிச்சத்தை கொடுத்தது.
இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர்,பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார். அவர் கமிட்டான படங்கள் அனைத்துமே ஒன்று மெகா ஹிட் இல்லை சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன. இதனால் ஒரு நாயகியின் சகாப்தம் தமிழ் சினிமாவில் எழுத ஆரம்பிக்கப்பட்டது.
சிம்ரனை பொறுத்தவரை அவரது பலமே அவரது அழகும், திறமையும். அவரிடம் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் பின்னி பெடல் எடுப்பவர். ஒருபக்கம் வாலியில் கிளாமர் ரோலும் செய்தார், மறுபக்கம் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கண் தெரியாத ருக்குவாக ரசிகர்களை கண் கலங்கவும் செய்தார். அதனாலேயே அவரது கொடி தமிழ் சினிமாவில் உச்சம் பறந்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அப்படி ஒரு ஹீரோயின் கிடைப்பது அபூர்வம் என்றே கோலிவுட் கருதியது.
தொடர்ந்து பீக்கில் இருந்த அவர் தனது பால்ய கால நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு சினிமாவிலிருந்து விலகிய அவர் சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி, ஐந்தாம் படை, வாரணம் ஆயிரம், பேட்ட, ராக்கெட்ரி, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் சிம்ரன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் சின்னத்திரையிலும் கால் பதிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் ஏதேனும் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜ்ஜாக வருகிறாரா இல்லை சீரியலில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அநேகமாக சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்புகள் அதிகம் என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள்.