இதுவும் செக்ஸியா தான் இருக்கு பாக்யராஜ் கூறிய பாடல்வரி பாடிய இளையராஜா
இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவரால்தான் தமிழ் திரையிசையின் அடையாளம் மாறியது. இதன் காரணமாகவே அவர் இன்றளவும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வாழ்க்கையும் திரைப்படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இந்தச் சூழலில் பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு பட பாடல் ரெக்கார்டிங்கின்போது நடந்த விஷயத்தை பார்க்கலாம்.
அன்னக்கிளி படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். முக்கியமாக அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வரப்பில் இருந்தவரும் இசைக்காக வாயை திறந்தார். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் முதல் படத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் கிராமத்து வாசனை அடிக்கக்கூடிய இசையை எந்த சமரசமுமின்றி அன்னக்கிளி படத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வந்து அவர் புதிய பாய்ச்சலை செலுத்த எவர்க்ரீன் கூட்டணியான பாரதிராஜா – இளையராஜா கூட்டணி உருவானது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவையும், இசையையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றனர். பாரதிராஜா மட்டுமின்றி மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என அப்போதைய பீக் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு கலைஞர் கருணாநிதி இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார்.
இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு இயக்குநர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவு மோதலையும் சந்தித்தவர். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடனும் ஒருகட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பிறகு பாரதிராஜாவுடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலசந்தருடன் கடைசிவரை கருத்து வேறுபாடு தீரவே இல்லை என்று கூறப்படுகிறது. இளையராஜா கடைசிவரை பிரியாமல் பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர்தான் பாலுமகேந்திரா. மேலும் இளையராஜாவுக்கு ரொம்பவே தலைக்கனம் அதிகம் என்றும் ஒரு விமர்சனமும் உண்டு.
இந்தச் சூழலில் இந்தியாவின் திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு பட பாடல் ரெக்கார்டிங்கின்போது நடந்த விஷயத்தை பார்க்கலாம். அதாவது அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும், விளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான் பாடலை இளையராஜாவும் ஜானகியும் பாடியிருப்பார்கள். பாடல் பதிவு 6 டேக் முடிந்து 7ஆவது டேக்குக்கு சென்றதாம்.
அப்போது பல்லவியின் வரிகளை மாற்ற முடிவு செய்த பாக்யராஜ், விளக்கு வெச்ச நேரத்துல மாமன் வந்தான்; மறைஞ்சு நின்னு பேசயில தாகமுன்னான், நான் கொடுக்க அவன் குடிக்க அந்த நேரம் தேகம் சூடு ஏறுது என்று எழுதினாராம். அதை படித்து பார்த்த இளையராஜா என்ன இப்படியெல்லாம் எழுதிருக்கீங்க என்று கேட்க; அதற்கு பாக்யராஜோ, ‘ஏன் நல்லா கிளுகிளுப்பாதானே இருக்கு’ என்று சொன்னாராம். அதற்கு ராஜாவோ, ‘இல்லை இல்லை இது செக்சியா இருக்கும்.. நான் மாலை போட்ருக்கேன் பாடமாட்டேன்’ என்று சொல்ல, ஜானகியோ நன்றாகத்தானே இருக்கு என்று சொன்னவுடன் ஒருவழியாக இளையராஜா பாடிவிட்டாராம். மேலும் பாடல் முடியும்போது, ‘விளக்கு வெச்ச நேரத்துல தன்னான்னா, மறைஞ்சு நின்னு பார்க்கையில தறினான்னா’ என்று பாடினாராம் இளையராஜா. அதுவும் பாக்யராஜுக்கு பிடித்துப்போக, பேக்கப் என்று சொல்லிவிட்டாராம்.
அதற்கு இளையராஜாவோ நான் ஒரு வரி பாடவே இல்லையே என்று சொல்ல; இல்லை நான் எழுதிக்கொடுத்தபோது, வரிகள் செக்சியா இருக்கு பாடமாட்டேன்னு சொன்னிங்க. இப்போ வரிகளே இல்லாமல் இப்படி பாடியதும் செக்சியாதான் இருக்கும். நான் எதிர்பார்த்ததைவிட நன்றாக வந்திருக்கிறது என்றாராம் பாக்யராஜ். இதனை பாக்யராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.