J.பேபி விமர்சனம்
ஏரியா மக்களிடம் ரகளை செய்யும் இடம், மகன்களின் ஒற்றுமைக்காக அழும் இடம், மன ஒழுங்கின்மையாலும் குற்றவுணர்வாலும் பிதற்றும் இடம், தன் கவலைகளை மறைத்துக்கொண்டு போலியாகச் சிரிக்கும் இடம் என எல்லா காட்சிகளிலும் ஊர்வசி பட்டாசாக வெடித்திருக்கிறார். தன் முதிர்ச்சியான நடிப்பால் அழுத்தமான பேபி கதாபாத்திரத்தைக் கச்சிதமாகத் திரையில் உலாவ விட்டிருக்கிறார். உடல்மொழி, வசன உச்சரிப்பு, உடையைச் சரிசெய்யும் இடங்கள் என நுணுக்கமான விஷயங்களிலும் தன் ஆளுமையைச் செலுத்தியிருக்கிறார்.குடும்ப பொறுப்பு, வறுமை மீதான கோபம், தாய்ப் பாசம், அண்ணன் மீதான மரியாதை, குற்றவுணர்வு, அது தரும் விரக்தி என உணர்ச்சிக் குவியலான சங்கர் கதாபாத்திரத்தின் இலக்கணத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமில்லாமல்லாத, யதார்த்தமான நடிப்பைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் தினேஷ். அடித்ததற்காக தன் தாயிடம் மன்னிப்பு கேட்கும் காட்சியும், அண்ணன் இருப்பதால் தங்கையின் வீட்டிற்கு வர மறுக்கும் காட்சியும் இரண்டு சோறு பதம்.
உணர்ச்சிகளின் ஏற்றயிறக்கங்களால் அலைக்கழியும் செல்வம் கதாபாத்திரத்தின் கனத்தை உள்வாங்கி, அதை நேர்த்தியாக தன் நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார் மாறன். ஆங்காங்கே கவுன்ட்டர் காமெடிகளாலும், சேட்டைகளாலும் சிரிப்பைத் தந்தாலும், இறுக்கமான மனநிலையை வெளிப்படுத்தும் தருணங்களில் சின்ன சின்ன உடலசைவுகளால் தன் நடிப்பிற்கு புது முகவரியைக் கொடுத்திருக்கிறார். கொல்கத்தாவில் இவர்களுக்கு உதவும் நபராக வருபவர், பேபியின் இளைய மகள், இளைய மகன் போன்ற துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்க்கின்றன.
ரயில் பயணத்தின் நெரிசலுக்கு இடையில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை ஃப்ரேம்களாலும், கொல்கத்தா நகரத்தின் அமைதியை ஆர்ப்பாட்டமில்லாத கேமரா நகர்வுகளாலும் ட்ரோன் ஷாட்களாலும் திரைக்குக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். ‘லைவ் லொகேஷன்’ காட்சிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பாளர் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்றாலும், இடைவேளை காட்சித் தொகுப்பையும், இரண்டாம் பாதியின் தொடக்கத்தையும் கூடுதல் கண்டிப்புடன் கையாண்டிருக்கலாம்.
டோனி ப்ரிட்டோ இசையில், பிரதீப் குமார் குரலில் ‘நெடுமரம் தொலைந்ததே’ பாடலும், கே.எஸ்.சித்ரா குரலில் ‘யார் பாடலை’ பாடலும் கதைக்கருவைப் பேசுவதோடு, இதயத்தையும் கணக்க வைக்கின்றன. உணர்ச்சிகரமான தருணங்களில் உயிர்ப்போடும், பேபி சேட்டை காட்டும் இடங்களில் துள்ளலாகவும் தன் பின்னணி இசையை அமைத்துக் கவனிக்க வைக்கிறார். ஆனாலும், இரண்டாம் பாதியில் அந்த வயலினுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருக்கலாம்.
முதற்பாதியில் ஆங்காங்கே தலை காட்டி வந்த ஊர்வசி, இரண்டாம் பாதியை முழுவதுமாக கையில் எடுக்கிறார். அவரின் சேட்டைகள், காமெடியான பேச்சுகள், மற்றவர்களிடம் வம்புக்குப் போவது, அதனால் அக்குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகள், அதனால் பேபிக்கு ஏற்படும் குற்றவுணர்வு என்பதாக நீள்கிறது இந்த சீக்குவன்ஸ். ஆனால், பேபி கதாபாத்திரத்தின் உண்மை முகத்தைக் காட்டும் இந்தக் காட்சித் தொகுப்புகளின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம். ஏற்கெனவே பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்ட விஷயத்தை மீண்டும் மீண்டும் அதே பாணியிலான காட்சிகளால் இழுத்திருக்கிறார் இயக்குநர்.
‘குடும்ப பிரச்னைகளைப் பேசும் சீரியலா? இல்லை உறவுச் சிக்கலை உணர்வுரீதியாக அணுகும் படமா?’ என சில இடங்களில் குழப்பமும் ஏற்படுகிறது. சில நெகிழ்ச்சியான உரையாடல்கள் மூலமாகவும், சில உயிர்ப்பான காட்சிகள் மூலமாகவும் அந்தக் குழப்பத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக, அண்ணனிடம் சங்கர் தன் மனைவியைப் பற்றிப் பேசும் காட்சி, தன் தாயுடன் இருமகன்கள் உரையாடும் இறுதிக் காட்சி, மனநலக் காப்பகத்தில் நடக்கும் காட்சிகள் ஆகியவை ஆழமான எழுத்தால் நம் மனதில் அழுத்தமாகவே பதிகின்றன.
சண்டை போட்டுக்கொண்ட அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான உரசலையும், தயக்கங்களையும், அவை சரியாகும் தருணங்களையும் மிகையற்று உயிர்ப்போடு காட்சிப்படுத்தியிருப்பதோடு, அவற்றை ஒரு சில காட்சிகளோடு சுருக்காமல், முழு திரைக்கதையையும் கைபிடித்து அழைத்துப் போகும்படி எழுதியது ரசிக்க வைக்கிறது.
திரைக்கதைக்குத் தொந்தரவு தரும் பாடல்களின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.பேபியின் இந்தச் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் சொல்லாமல் போனதோடு, பேபி கதாபாத்திரத்தை முழுக்க உணர்ச்சிகரமாக மட்டுமே திரைக்கதை அணுகியதும் ஒரு ‘அம்மா சென்ட்டிமென்ட்’ படத்திற்கான சாயலையும் ஒரு பக்கம் கொடுக்கிறது. இருந்தும் அந்தக் கதாபாத்திரம் மூலம் மனநல பிரச்னைகளை குடும்ப அமைப்பு எவ்வாறு அணுகவேண்டும் என்று சொன்னது சிறப்பு.