Now Reading
ரணம் விமர்சனம்

ரணம் விமர்சனம்

தன் காதல் மனைவியை விபத்தில் இழந்து, அந்த விபத்தால் மூளையின் உட்பகுதியில் காயமும் ஏற்படவே, அதனால் அடிக்கடி தன்னிலை மறக்கும் பிரச்னையால் அவதிப்படுகிறார் சிவா (வைபவ்). சிதைந்த சடலங்களுக்கான முகம் வரையும் ‘முக மீட்டுருவாக்க வரை கலைஞராக’வும், மாதவரம் காவல்நிலையத்திற்கு ‘க்ரைம் ஸ்டோரி’ எழுதித்தருபவராகவும் இருக்கிறார். இந்நிலையில், பாதி எரிந்த நிலையில் இருக்கும் மனித உடற்பாகங்களை தனித்தனியே அட்டைப் பெட்டிகளில் வைத்து, சென்னையின் மூன்று முக்கியமான இடங்களில் சாலையில் போட்டுச் செல்கிறார் ஒரு மர்ம நபர்.

காதல் மனைவியை இழந்த வேதனை, தனக்கு இருக்கும் உடல்ரீதியான பிரச்னை, சடலத்திற்கு முகம் வரைவது, கொலை வழக்குகளைத் துப்பறிவது போன்ற வேலைகள் தரும் இறுக்கம் என அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்ட்டாக அணுகி, அக்கதாபாத்திரத்தையே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் வைபவ். ஒரு பெரிய வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை ஆய்வாளராக தான்யா ஹோப், அக்கதாபாத்திரத்திற்கான எந்தச் சிரத்தையும் எடுக்காமல், ஒப்பேற்றி இருக்கிறார். அதிரடி முடிவுகள், ஆக்‌ஷன், பரபரப்பு என எல்லாவற்றிலும் ஒரே முகபாவனை. தன் மகளுக்காக உருகும் தாயாக நந்திதா ஸ்வேதா கொஞ்சம் மனதில் நிற்கிறார். கிச்சா ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, பத்மன் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

ஒரு க்ரைம் திரில்லர் படத்திற்குத் தேவையான பங்களிப்பை ஓரளவிற்குத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி.கே.ராஜா. இரவு நேரச் சண்டைக்காட்சிகளுக்கு ஒளியால் சற்றே புதுமை புகுத்த முயன்றிருக்கிறார். எக்கச்சக்க லேயர்களைக் கொண்டு ‘உசைன் போல்ட்டைப் போல் நில்லாமல் ஓடும்’ இரண்டாம் பாதியில் படத்தொகுப்பாளர் முனீஸ் கொஞ்சமாவது நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கலாம். அரோள் கரோலி இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கவில்லை. பின்னணி இசையால் சில பரபர காட்சிகளுக்கு மட்டும் வலுசேர்த்திருக்கிறார்.
லாஜிக் ஓட்டைகள், மேலோட்டமான காட்சிகள், நம்பகத்தன்மையே இல்லாத திருப்பங்கள் என இரண்டாம் பாதி அயற்சியை மட்டுமே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. குற்றங்களை வாய்ஸ் ஓவர்களில் விளக்கும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஆவண நிகழ்ச்சியைப் பார்த்த அனுபவத்தைத்தான் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது படம்.
Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)