பைரி விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டவுனின் அறுகுவிளை பகுதியில் தலைமுறை தலைமுறையாகப் புறா பந்தயங்களில் ஈடுபட்டுவருகிறது ராமலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பம். இந்தப் பந்தயங்களினால் தன் குடும்பத்திற்குப் பல இழப்புகள் நேர்ந்ததால், தன் மகனான ராமலிங்கத்தைப் புறா பந்தயங்களின் பக்கம் செல்லவிடாமல், அவரைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டு செல்ல போராடுகிறார் சரஸ்வதி (விஜி சேகர்). ஆனால் தன் தாயின் விருப்பத்திற்கு மாறாக, படிப்பை முடிக்காமல், தன் நண்பன் அமலுடன் (ஜான் கிளாடி) புறா பந்தயத்தில் களமிறங்குகிறார் ராஜலிங்கம். இதனால் ராஜலிங்கம், அவரின் குடும்பம், அவரின் நண்பர்கள் ஆகியோரின் வாழ்க்கையில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் ஜான் கிளாடியின் ‘பைரி – பாகம் ஒன்று’.
புறா பந்தயத்தின் மீதுள்ள பித்தால் எந்த எல்லைக்கும் செல்லும் துடிப்பான இளைஞராகவும், பந்தயத்தில் திருட்டுத்தனம் செய்யும் போது தட்டிக் கேட்கும் கோபக்கார இளைஞனாகவும், காதலியிடம் உருகுபவராகவும் ராஜலிங்கத்தை கண்முன் கொண்டுவந்திருக்கிறார் சையத் மஜீத். புறா பந்தயத்திலும் அதற்கான பயிற்சியிலும் ஈடுபடும்போதுள்ள உடல்மொழி, வெவ்வேறு சூழல்களில் புறாக்களைக் கையாளும் போது காட்டும் நேர்த்தி என நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அடிக்கடி ‘ஹை பிச்சில்’ கத்துவதையும், மிரட்டும்போது கோபம் என்பதாகக் கண்களை அநியாயத்திற்கு அகல விரிப்பதையும் குறைத்திருக்கலாம்.
கதாநாயகனின் உயிர் நண்பராகவும், போக்கிரி தனமும், அன்பும் நிறைந்தவராகவும் இருக்கிறது இயக்குநர் ஜான் கிளாடி ஏற்றிருக்கும் அமல் கதாபாத்திரம். தொடக்கத்தில் அவரின் முகபாவனைகளும் உடல்மொழியும் அந்நியத்தனமாக இருந்தாலும், அவற்றை வைத்தே அக்கதாபாத்திரத்தின் இலக்கணத்தை வடித்து, இறுதிப்பகுதிகளில் நம் மனதில் நிற்கிறார். அமலின் தந்தையாக மாற்றுத்திறனாளியாக வரும் ராஜன், இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் தன் அழுத்தமான நடிப்பைக் காட்டிக் கலங்கடித்திருக்கிறார். சுயம்பு என்கிற பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் வருபவர் தன் உடல்மொழியால் தொடக்கத்தில் மிரட்டுகிறார். பின்பு அந்த உடல்மொழியே ஓவர் டோஸ் ஆக, நடிப்பில் அதீத செயற்கைத்தன்மை தொற்றிக்கொள்கிறது. லிப் சின்க் பிரச்னையும் இருப்பது கூடுதல் மைனஸ்!
பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அம்மாவாக விஜி சேகர், அக்கறையும் பொறுப்பும் கொண்டவராக ரமேஷ் ஆறுமுகம், வஞ்சகம் கொண்ட வில்லனாக கார்த்தி பிரசன்னா ஆகியோர் படத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அம்மா கதாபாத்திரம் தொடர்ந்து கத்திக்கொண்டே இருப்பதை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். மேகனா ஏலன், சரண்யா ரவிசந்திரன், மறைந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா ஆகியோர் தாக்கம் தராமல் வந்து போகிறார்கள்.
புறா வளர்ப்பு, பந்தயம் தொடர்பாகத் தரையிலும், ஆகாயத்திலும் மாறி மாறி நகரும் காட்சிகளுக்கு தன் நேர்த்தியான ப்ரேம்களால் கைகொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அ.வி.வசந்தகுமார். கன்னியாகுமரியின் சூழலுக்கு இடையில் வெக்கையும் ஜன நெருக்கடியும் நிறைந்திருக்கும் ஒரு நிலப்பரப்பை கண்முன் கொண்டு வந்த விதத்தில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு கவனிக்கத்தக்கது. படத்திற்குத் தேவையான விறுவிறுப்பையும் நிதானத்தையும் படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ் குமார் தந்திருக்கிறார் என்றாலும், ஊசலாடும் தொடக்கக் காட்சிகளை இன்னும் செறிவாகவும் தெளிவாகவும் தொகுத்திருக்கலாம்.
அருண் ராஜின் இசை ஏற்பாட்டில், பொன் மனோபன் வரிகளில், ராஜ் குமார் மற்றும் செல்வ குமாரின் குரலில் ஒலிக்கும் வில்லுப்பாட்டுகள் படம் முழுவதும் வந்து ரசிக்க வைக்கின்றன. வில்லுப்பாட்டைத் திரைக்கதையின் மற்றொரு குரலாகப் பயன்படுத்திய விதம் புது அனுபவத்தையும் சுவாரஸ்யத்தையும் தருகிறது. அதேநேரம், டிராமாவாக திரைக்கதை நகர்ந்து கொண்டிருக்கும் போது சில இடங்களில் இந்தப் பாடல்கள் ஓவர்டோஸாக மாறி தொந்தரவும் செய்கின்றன. பிற பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ‘அயிகிரி நந்தினி’ பாடல் வெர்சன் மட்டும் ஒரு ‘வைப்பை’ தந்து செல்கிறது. பாடல்களில் விட்டதைப் பின்னணி இசையில் பிடித்திருக்கிறார் அருண் ராஜ். படம் நெடுக விரவிக்கிடக்கும் மாஸான இசை புறா பந்தயக் காட்சிகளுக்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
நாகர்கோவில் டவுன் பகுதியில் பேசப்படும் வட்டார வழக்கை வசனங்களில் துல்லியமாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். சமகால இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும் இடையிலான அவ்வட்டார வழக்கின் வார்த்தை வேறுபாடுகளை நன்றாக உணரும்படி, கவனத்துடன் கையாண்டுள்ளனர். ஆனால், சில காட்சிகளில் தேவைக்கு மீறிய அதிகமான வசனங்களும், ரிப்பீட் அடிக்கும் வசனங்களும் கொஞ்சம் டயர்டாக்குகின்றன.
புறா வளர்க்கும் வீடுகள், புறா பந்தயங்கள், அதைச் சுற்றிய கிளப்புகள், பந்தயத்தை வெறியாகக் கொண்டு இயங்கும் இளைஞர்கள், அய்யா வைகுண்டர் வழி வாழ்வியல், வழிபாட்டு முறை, அதைப் பின்பற்றும் மக்கள், நாகர்கோவிலின் நெருக்கடியான தெருக்கள் எனப் பிரத்தியேகமான நாஞ்சிலின் இன்னொரு உலகத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜான் கிளாடி.
புறா பந்தயத்தின் வரலாறு, அதை வளர்க்கும் முறை, புறா பந்தயங்களின் வகைகள், பந்தயப் புறாக்களை வேட்டையாடும் ‘பைரி’ என்று அழைக்கப்படும் கழுகு இனம் என அடுக்கடுக்கான தகவல்கள், கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் என வேகவேகமாகவும், அழுத்தமில்லாமலும் துண்டுதுண்டாகவும் நகர்கின்றன அந்தக் காட்சிகள். மேலும், காதல் என்ற பெயரிலான வன்தொடர்தல் காட்சிகளும் படத்தோடு நம்மை முழுதாக ஒன்ற விடாமல் சோதிக்கின்றன. ஆனாலும், வில்லுப்பாட்டின் வழியாகக் கதை சொல்வது புதுமையானதொரு அனுபவத்தைத் தருகிறது.
உணர்ச்சிகரமான தருணங்களைக் கொண்ட இரண்டாம் பாதி விறுவிறு என்றே நகர்கிறது. அதனோடு துரத்தும் வில்லன் கும்பல், தன் நண்பனைக் காக்கப் போராடும் நண்பர்கள், தன் மகனை மீட்கப் பரிதவிக்கும் தாய், தன் மகனுக்காகக் கதறும் தந்தை என உணர்வுபூர்வமான காட்சிகளும் வலுவாகவே எழுதப்பட்டுள்ளன.
இது முதல் பாகம் மட்டுமே என்றாலும், தனிப்படமாக இதற்கேற்ற ஒரு முழுமையையும் இயக்குநர் கடத்தியிருக்கலாம். காதல் கதை தொடங்கி பல்வேறு கேள்விகள் பதில்கள் இன்றி அந்தரத்திலேயே விடப்பட்டிருக்கின்றன. அதேபோல, இந்தப் பந்தயங்களாலும், வன்முறைகளாலும் பயனடையும் கூட்டத்தையும் கைகாட்டி, இந்த இளைஞர்களின் வாழ்வில் யார் நிஜமான ‘பைரி’ என்பதையும் அடையாளப்படுத்தியிருக்கலாம்.