Now Reading
லால் சலாம் விமர்சனம்

லால் சலாம் விமர்சனம்

இஸ்லாமியர்கள் பெரும்பானமையாக வாழும் முரார்பாத் என்ற கிராமத்தில் முஸ்லிம்களும் இந்துக்களும் அண்ணன், தம்பியாக பழகி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் இருந்து இளம் வயதில் மும்பைக்கு சென்று அங்கு பெரிய தொழிலதிபராக வலம் வரும் மொய்தீன் பாய் (ரஜினிகாந்த்) மகன் சம்சுதீனும் (விக்ராந்த்) அவரது நெருங்கிய நண்பரின் மகன் திருவும் (விஷ்ணு விஷால்) சிறுவயது முதலே எலியும் புலியுமாக இருக்கின்றனர்.

கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் சிறு மோதல், பெரிய கலவரமாக வெடித்து அண்ணன், தம்பிகளாக பழகிவந்த இந்து – முஸ்லிம் மக்களிடையே பெரிய பிளவு ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிராமத்தில் தேர்த் திருவிழா நடத்த இந்து மக்கள் முடிவு செய்யும்போது ஓர் அரசியல் கட்சியின் சதியால் திருவிழா தடுக்கப்படுகிறது. இறுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே ஒற்றுமை நிலவியதா, தேர்த் திருவிழா நடந்ததா, இதில் மொய்தீன் பாயின் பங்கு என்ன என்பதை பேசுகிறது ‘லால் சலாம்’.

மதங்களை முன்னிறுத்தி விவாதங்கள் தொடர்ந்து எழும் சூழலில் இப்படியொரு கதைக்களத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை மனதார பாராட்டலாம். மதநல்லிணக்கத்தை வலியுறுத்துகிறேன் என பிரச்சார நெடியுடன் வலிந்து திணிக்காமல் காட்சிகளுக்கு தேவையான வசனங்களின் மூலம் முக்கியமான கருத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஓரளவு வெற்றியும் பெறுகிறார்.

படத்தின் முதல் பாதி முழுவதும் முரார்பாத் கிராமத்தில் வாழும் மக்களை பற்றியும், விஷ்ணு விஷால் – விக்ராந்த் இடையிலான பகைமை, விளையாட்டில் தூவப்படும் வெறுப்புணர்வு மெல்ல எப்படி ஒரு கிராமத்தையே பாதிக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் நான்-லீனியர் முறையில் சொல்லப்படுகிறது. கலவரத்தைத் தொடர்ந்து சிறைக்கு சென்று வெளியே வரும் விஷ்ணு விஷால், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இடையில் ஒரு காதல் பாட்டு என சற்றே தொய்வுடன் தொடங்கும் படம், ரஜினியின் என்ட்ரிக்கு பிறகு சூடு பிடிக்கிறது.

சமீப வருடங்களில் வெளியான ரஜினி படங்களையே தூக்கி சாப்பிடும்படியாக ரஜினிக்கு ஒரு மாஸ் இன்ட்ரோ காட்சி. கூடவே ரஹ்மான் குரலில் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு நிச்சயம் செம விருந்து. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ரஜினியின் கதாபாத்திர வடிவமைப்பும் சிறப்பு.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதயத்தை உருக வைக்கிறது. தேர்த் திருவிழா பாடல், மறைந்த ஷாஹுல் ஹமீதுவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருக்கும் ஒரு பாடல் ஆகியவை சிறப்பு.

See Also

படத்தில் பல இடங்களில் எமோஷனல் காட்சிகள் நன்றாக கைகொடுத்துள்ளன. குறிப்பாக, செந்தில் தனது மகன் குடும்பத்தை பற்றி பேசும் காட்சி, மருத்துவமனையில் இருக்கும் தனது மகனை நினைத்து ரஜினி ‘அல்லாஹ்’ என்று கதறி அழும் காட்சி ஆகியவை நெகிழச் செய்கின்றன.

சமூக வலைதளங்களில் மதங்களை முன்வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசும் வன்மக் கணைகளுக்கு நடுவே ஒரு முக்கிய கருத்தை, ரஜினி என்ற ‘பிராண்ட்’ உடன் சுமந்து வந்திருக்கும் ’லால் சலாம்’ படத்தை தாராளமாக வரவேற்கலாம். திரைக்கதையை மெருகேற்றி, காட்சிகளில் அழுத்தம் கூட்டியிருந்தால் இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)