டெவில் விமர்சனம்
டிராவலரான ரோஷன் (திரிகுன்) பைக் ஓட்டி வரும்போது எதிர்ப்பாராத விதமாக ஹேமா (பூர்ணா) தன் காரால் இடித்து விடுகிறார். அதில் ரோஷனுக்கு கையில் பலத்த காயம் ஏற்படுகிறது. தன்னால் பாதிக்கப்பட்ட ரோஷனை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹேமா. ரோஷனுக்காக சமையல் செய்து தருவது, காரில் ஊர் சுற்றிக்காட்டுவது, ரெஸ்டாரன்ட்டுக்கு அழைத்துச் செல்வது என ரோஷனுடன் நட்பை வளர்க்கிறார்.
சில நாட்களிலேயே அந்த நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர்வதை உணர்ந்த ஹேமா, ரோஷனிடமிருந்து விலகி, தன்னுடைய வீட்டிற்குத் திரும்புகிறார். அங்கே அவரது கணவனான அலெக்ஸ் (விதார்த்) உறைந்து போய் உட்கார்ந்திருக்கிறார். அலெக்ஸுக்கு என்ன ஆனது, அவருக்கும் ஹேமாவிற்குமான திருமணம் என்ன ஆனது, ரோஷனுடனான நட்பு ஹேமாவின் வாழ்க்கையில் செய்யப் போகும் மாற்றங்கள் என்னென்ன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் தருகிறது இயக்குநர் ஆதித்யாவின் ‘டெவில்’.
மொத்த படத்தையும் தனியாளாக தாங்கியிருக்கிறார் பூர்ணா. இறுக்கமும், அழுத்தமும், ஏக்கமும் முகமெங்கும் வியாபிக்கும் பலவித உணர்வுகளின் குவியலாக படம் நெடுக வருகிறார். சில தருணங்களில் உடைந்து அழும் காட்சிகளில் ஹேமா கதாபாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். சின்னச்சின்ன முகபாவனைகளால் `சபாஷ்’ போட வைக்கிறார்.
காதலும், வில்லத்தனமும் கலந்த கலவையில் திரிகுன் நடிப்பில் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்கான வலுவான நடிப்பைக் கோரும் காட்சிகள் படத்தில் இல்லை. இரண்டாம் பாதியில் தன் நடிப்பால் படத்திற்கு வலுசேர்திருக்கிறார் விதார்த். காதல், காமம், கோபம், குரோதம், குற்றவுணர்வு எனப் பல பரிமாணங்களில் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்.கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அடித்து விளையாடியிருக்கிறது. கவித்துவமான சில ஷாட்கள் கவர்ந்தாலும், சில `குறியீட்டு குமார்’களாக துருத்திக்கொண்டு நிற்கின்றன. இளையாராஜா.எஸ்-இன் படத்தொகுப்பு தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து எழுதிய ‘விடியல் தேடும் மனிதருக்கு’ பாடல் மட்டும் சிலாகிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் ஆங்காங்கே இளையராஜா பாடல்களின் தாக்கமும், மிஷ்கின் படங்களுக்கே உரிய பின்னணி இசைக்கோர்வைகளின் தாக்கமும் நிரம்பி வழிகிறது. வசனங்கள் இல்லாத இடங்களை வயலினால் நிறைத்திருக்கிறார். ஆனாலும், த்ரில்லராக உருமாறும் இரண்டாம்பாதியின் விறுவிறுப்புக்குக் கைகொடுத்திருக்கிறார் மிஷ்கின். நுணுக்கமான ‘ஒலி வடிவமைப்பில்’ அழகிய கூத்தன் தனித்துக் கவனிக்க வைக்கிறார்.
இரண்டாம் பாதிதான் படத்தின் கதைக்கருவை விவரிக்கிறது. த்ரில்லர் மோடுக்கு மாறும் இப்பகுதி, விறுவிறுப்பையும் பரபரப்பையும் தொழில்நுட்ப உதவியோடு நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. மேலும், ‘ஹேமா’வின் மனப்போராட்டங்களை தன் நடிப்பால் சில காட்சிகளில் கண்முன் கொண்டுவந்து ரசிக்க வைக்கிறார் பூர்ணா. ஆனால், சிறிது நேரத்திலேயே படம் ஹாரர், தத்துவார்த்தம், ஆன்மிகம் என தடம் மாறி, ‘டெவில்’ என்பது என்ன என்பதை மறைமுகமாகச் சொல்லி எதிர்ப்பாராத ட்விஸ்ட்டோடு சுவாரஸ்யமற்று கொட்டாவி வரவைக்கும் எத்தனிப்போடு நிறைவடைகிறது.
முதல் பாதியில் தேவையே இல்லாமல் நீளும் காதல் சரசக் காட்சிகளைக் குறைத்து, இறுதிப்பகுதியில் வரும் ஆன்மிக, தத்துவார்த்த பார்வைகளை விரிவான காட்சிகளாக்கி பார்வையாளர்களோடு உரையாடி இருக்கலாம்.