சிக்லெட்ஸ் விமர்சனம்
இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் சிக்லெட்ஸ். இந்த படத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மரனாபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, பாலமுரளி இசையமைத்துள்ளார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு மற்றும் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் செய்துள்ளார். முழுக்க முழுக்க 2K கிட்ஸ்சை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டு உள்ளது.
நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்டர், மஞ்சீரா ஆகியோர் பள்ளியில் இருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது நமக்கு விடுதலை கிடைத்துள்ளது என்று எண்ணி இந்த மூன்று இளம் பெண்களும் தனது நண்பரின் சகோதரி திருமணத்திற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, மூன்று ஆண் நண்பர்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். ஆனால் இந்த விஷயம் அந்த பெண்களின் வீட்டிற்கு எப்படியோ தெரிந்து விடுகிறது, அதன் பின்பு என்ன ஆனது என்பதே சிக்லெட்ஸ் படத்தின் கதை. பொதுவாக அடல்ட் காமெடி படம் என்றால் அது ஆண்களை சுற்றி மட்டுமே இருக்கும், ஆனால் சிக்லெட்ஸ் படம் முதல் முறையாக வித்தியாசமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களது பார்வையில் இருந்து படம் சொல்லப்பட்டுள்ளது, இது ஏ சர்டிபிகேட் படம் என்பதால் அதனை முடிந்தவரை தங்களுக்கு சாதாரணமாக பயன்படுத்தி உள்ளனர் படக்குழு. படத்தில் உள்ள மூன்று பெண் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுதப்பட்டிருந்தது. ரியாவாக நடிக்கும் நயன் கரிஷ்மா இப்படத்தில் தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். ரியாவின் அம்மாவாக நடித்துள்ள சுரேகா வாணி, பெண்ணின் தந்தையாக நடித்துள்ள ஸ்ரீமன், மருந்தாளுநராக மறைந்த நடிகர் மனோ பாலா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஒரு அடல்ட் காமெடி படத்திற்கு தேவையான வசனங்களும் காட்சிகளும் படம் முழுக்க நிறைந்துள்ளது. ஆனால் ஒரு கட்டத்தில் படம், டீன் ஏஜ் பெண்களை வளர்க்கும் பெற்றோர்களின் படமாக மாறுகிறது.
இரண்டு பேரின் பார்வையில் இருந்தும் கதையை சொல்ல நினைத்த இயக்குனர் இரண்டையும் முழுமையாக சொல்லாததால் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்ற எண்ணம் படம் பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது. படத்தில் இடம்பெற்று இருந்த சில வசனங்களும் நன்றாக எழுதப்பட்டிருந்தது. உடல் ரீதியாக தொடும்போது மட்டும் காதல் ஏற்படாது, அது மனரீதியாகவும் இருக்க வேண்டும் போன்ற வசனங்களும் நன்றாக இருந்தது. கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு ஒரு கலர்புல் டோனை படத்திற்கு வழங்கி உள்ளது. பாலமுரளியின் இசையில் பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்து இருக்கலாம். ஆனாலும், இளைஞர்கள் மத்தியில் சிக்லெட்ஸ் நிச்சயம் சுவைக்கும்.