சபா நாயகன் விமர்சனம்
குடிபோதையில் நள்ளிரவில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கும் சபா என்கிற அரவிந்த்தை (அசோக் செல்வன்) காவல்துறை கைது செய்கிறது. அன்று இரவு முழுக்க இரவு ரவுண்ட்ஸ் செல்லும் காவலர்களிடம் சபா தன் வாழ்வில் நடந்த மூன்று காதல் கதைகளைச் சொல்கிறான். அந்தக் காதல்கள் எப்படித் தோன்றி, எப்படி முடிகின்றன, அதில் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, அதில் ஒன்றாவது ஜெயித்ததா என்பதை நகைச்சுவை கலந்து ஜாலியாகச் சொல்ல முயன்றிருக்கிறது படம்.
துள்ளலான நடனம், அதிரடி சண்டை, காமெடி காட்சிகள் என முதல் முறையாக ஒரு முழுமையான என்டர்டெயினராகக் களத்திற்கு வந்திருக்கிறார் அசோக் செல்வன். அதில் பாஸ் மார்க்கும் வாங்குகிறார். சேட்டையான பள்ளிப் பருவம், கல்லூரிக் கால காதல் என மூன்று பருவங்களையும் சிறப்பாகக் கையாண்டவர், பள்ளிப் பருவத்துக்காக உடலைக் குறைத்து வித்தியாசம் காட்டியுள்ளார். பள்ளிப் பருவத்து நாயகியாக வரும் கார்த்திகா முரளிதரனுக்குப் படத்தின் முற்பாதியில் நடிப்பதற்குப் பெரிதாக வாய்ப்பில்லை. இரண்டாம் பாதியில் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
கல்லூரி பருவத்து நாயகியாக வரும் சாந்தினி நடனத்தில் சற்று சிரமப்பட்டாலும், க்யூட் ரியாக்ஷன்களால் ஈர்க்கிறார். மற்றொரு காதலியாக வரும் மேகா ஆகாஷ் தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் அவரது கதாபாத்திரத்தை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
படத்தில் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருந்தாலும் ஒரு ஜாலியான படத்திற்கான ஒளியுணர்வை மூவருமே ஒன்றாக ஒரே டோனில் சரியாக செட் செய்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் நீண்டுகொண்டே செல்லும் பள்ளிப் பருவத்துக் காதல் கதையை இன்னும் சுருக்கமாக வெட்டியிருக்கலாம்; அதேபோல ஒரு காதல் கதை முடிகிறது என்பதிலிருந்து அடுத்த இடத்திற்கு நகர்வதை இன்னும் சுவாரஸ்யமாகக் கோர்க்க முயன்றிருக்கலாம். லியான் ஜேம்ஸ் இசையில் கார்த்தி நேத்தா எழுதிய ‘சீமக்காரியே’, ஜி.வி பிரகாஷ் பாடிய ‘பேபி மா’ போன்ற பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. பின்னணி இசையிலும் குறைகள் இல்லை.
சபாநாயகன் படம் பார்க்கும் ரசிகர்களை முழுக்க முழுக்க ஹேப்பியான மோடில் வைத்திருக்க வேண்டும் என்கிற இயக்குநர் கார்த்திகேயனின் மெனக்கெடல் முக்கால்வாசி வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்பது நீளம் தான். பள்ளி காட்சிகள் தொடர்பான இடங்களில் படத்தொகுப்பாளர் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். அதனைத் தவிர்த்து சில மைனஸ்கள் இருந்தாலும் இப்படம் ரசிகர்களை கவரும்படியே வந்துள்ளது.
மேலும் இந்தா ஒரு காதல் கதை முடிந்துவிட்டது என நினைத்தால் சில நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த காதல் வருவது, பெண்கள் சற்று பணம் இருந்தால் தான் பார்ப்பார்கள் என்கிற ரீதியில் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் படம் சொல்லும் வரும் விஷயம் அழுத்தமே இல்லாமல் போகிறது. அதேசமயம் ஆங்காங்கே காமெடி காட்சிகள் வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு இடம் பெற்றுள்ளது.
பாடல்கள் படத்தின் கதையின் நீளத்துக்காகவே தேவைப்பட்டுள்ளதே தவிர பெரிதாக கவரவில்லை. லியோன் ஜேம்ஸின் பின்னணி இசை, பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய 3 பேரும் ஒளிப்பதிவு ஆகியவை பல இடங்களில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
லாஜிக் பார்க்காமல், மைனஸ்களை பற்றி யோசிக்காமல் பொறுமையாக பள்ளி, கல்லூரி கால ஜாலி காதலுக்காக “சபாநாயகன்” படத்தை ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்.