பார்க்கிங் விமர்சனம்
ஐடி வேலையில் இருக்கும் ஈஸ்வரும் (ஹரிஷ் கல்யாண்) அவருடைய காதல் மனைவி ஆதிகாவும் (இந்துஜா) ஒரு மாடி வீட்டில் வாடகைக்குக் குடியேறுகின்றனர். கீழ் வீட்டில் மனைவி (ரமா), மகளுடன் (பிரதனா நாதன்) பத்து ஆண்டுகளாகக் குடியிருக்கிறார் பேரூராட்சி செயல் அலுவலரான இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). இரண்டு குடும்பமும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறார்கள். கர்ப்பிணி மனைவிக்காக கார் ஒன்றை வாங்குகிறார் ஈஸ்வர். வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்வதால் இளம்பரிதிக்கு பைக்கை நிறுத்துவதில் சிரமமாகிறது. இந்தப் பிரச்சினையால் ஏற்படும் சின்னச் சின்ன தகராறுகள் ஈகோ மோதலாக வெடிக்கிறது. இளம்பரிதியும் ஒரு காரை வாங்க மோதல் இன்னும் தீவிரமடைகிறது. இந்த பார்க்கிங் பிரச்சினையால் இளம்பரிதிக்கும் ஈஸ்வருக்கும் என்ன ஆனது, அவர்களின் குடும்பப் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்கிறது மீதிப் படம்.
சாதாரண பார்க்கிங் பிரச்சினையை வைத்து எப்படி 2 மணி நேர படம் எடுக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால் இது போன்ற சாதாரண பிரச்சினைகள்தான் மனித மனங்களின் அடி ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும் சிறுமைகளையும் கீழ்மைகளையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கின்றன என்பதைக் கச்சிதமாக உணர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். கதாபாத்திர அறிமுகங்களுக்கு தொடக்கத்தில் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்வதுபோல் தோன்றினாலும் அதுவும் திரைக்கதைக்குத் தேவையாகவே இருக்கிறது. சின்ன மனஸ்தாபமாகத் தொடங்கும் பிரச்சினை எப்படி எல்லாம் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை நம்பகத்தன்மையுடன் சித்தரித்திருக்கிறார். ஒரு சின்ன பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைவதன் உஷ்ணத்தை பார்வையாளர்களால் உணர முடிகிறது. அந்த அளவுக்குக் காட்சிகள் வலுவாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
படத்தில் இளம்பரிதியின் செயல்பாடுகளால் ஈஸ்வர் மீதும் ஈஸ்வரின் செயல்பாடுகளால் இளம்பரிதி மிதும் நமக்கு பரிதாபம் ஏற்படுகிறது. கோபமும் வருகிறது. இதுவே திரைக்கதையின் வெற்றி. மனிதர்கள் இப்படி கூடவா நடந்துகொள்வார்கள்? என்று தோன்றும்போது ஈகோ, மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும் என்றும் தோன்றிவிடுகிறது. அதே நேரம் இறுதிப் பகுதியில் இந்தப் பிரச்சினை வன்முறையாக உருவெடுப்பது தேவையற்றத் திணிப்பாகத் தெரிகிறது. படம் இரண்டு மணி நேரம்தான் என்றாலும் சில இடங்களில் படத்தின் நீளம் உறுத்தவே செய்கிறது. கதை எளிதானது என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
தனது அட்டகாசமான நடிப்பால் படத்தைத் தாங்கி நிற்கிறார் எம்.எஸ்.பாஸ்கர், அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண். இந்துஜா, கொடுத்த வேலையைக் குறையின்றி செய்ய ரமா, பிரதனா நாதன் இருவரும் தேர்ந்த நடிப்பால் மனதில் நிற்கிறார்கள். சாம் சி.எஸ் பின்னணி இசையும் ஃபிலோமின் ராஜின் கூர்மையான படத்தொகுப்பும் திரில்லர் படம் பார்க்கும் சுவாரசியத்தைத் தருகின்றன.
ஈகோ, ஒரு மனிதனை எவ்வளவு மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதையும் ஆண்களின் வறட்டு கவுரவம் குடும்பப் பெண்களை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் மனிதர்களுக்குள் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதன் அவசியத்தையும் துளியும் பிரச்சார நெடியின்றி சொல்லி இருக்கும் படக்குழுவினரை பாராட்டலாம்.