Conjuring Kannappan விமர்சனம்
அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து இன்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளிவந்துள்ளது கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம். இப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஏற்கெனவே தமிழில் எக்கச்சக்க பேய் படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படத்தினை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளதால் படம் நிச்சயம் திருப்தி அளிக்கும் படமாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கான்ஜூரிங் கண்ணப்பன் என்பதை பார்க்கலாம்!
கதாநாயகன் சதீஷ் தனக்கு கிடைக்கும் ட்ரீம் கேச்சரில் இருந்து ஒரு இறகினை தெரியாமல் தனியாக பிரித்து எறிந்து விடுகின்றார். இதனால் அவருக்கு ஒரு கெட்ட கனவு வருகின்றது. இது குறித்து முதலில் சதீஷ் அமானுஷ்ய ஆய்வாளராக உள்ள நாசர் மற்றும் மனநல மருத்துவராக உள்ள ரெடின் கிங்ஸ்லி ஆகியோரிடம் இது குறித்து கூறுகின்றார். நாசர் சொல்வதை நம்பாத சதீஷ் ரெடின் கிங்ஸ்லீயின் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுகின்றார்.
ஆனால் தூங்கிய உடனே வரும் கெட்ட கனவில் சதீஷூக்கு அடிப்பட்டால் கனவு முடிந்து நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு அடிப்பட்டு இருக்கும். இதனைப் பார்த்து மிகவும் பயப்படும் சதீஷ் அதன் பின்னர் நாசர் சொல்வதை நம்புகின்றார். சதீஷ் கனவில் தனக்கு துணைக்கு ஆட்கள் வேண்டும் என ஆனந்த் ராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லீயை ட்ரீம் கேச்சரில் இருந்து இறகினை பிரித்து எடுக்க வைத்து விடுகின்றார்.