மாவீரன் விமர்சனம்
குப்பத்தில் வாழும் ஹீரோ சத்யா(சிவகார்த்திகேயன்) உள்ளிட்டோரின் குடும்பங்களை கட்டாயப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றுகிறது அரசு. அங்கு சென்ற பிறகே அந்த வீடுகள் தரமில்லாமல் இருப்பது தெரிய வருகிறது.தரமில்லாத வீடுகளால் தினம் தினம் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் பிரச்சனைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறார் கார்டூன் கலைஞரான சத்யா. அட்ஜஸ்ட் பண்ணி வாழ கத்துக்கணும் என எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் தன் தாயிடம்(சரிதா) சொல்கிறார்.
எதிர்பாராத விஷயங்கள் நடக்கிறது. ஹீரோ சத்யா தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அப்பொழுது அவருடைய கார்டூன் கதையின் ஹீரோவான ஒரு போர் வீரனின் குரல் கேட்கிறது. அந்த குரல் சொல்வதை கேட்டு நடக்கிறார் சத்யா. தன் மக்களுக்காக துணிந்து போராடுகிறார்.
அப்படி போராடுவதால் அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பதற்கு காரணமான அமைச்சர் எம்.என். ஜெயக்கொடியின்(மிஷ்கின்) கோபத்திற்கு ஆளாகிறார் சத்யா.
அந்த கோழையான கார்டூன் கலைஞர் தனக்குள் இருக்கும் சூப்பர் ஹீரோவை கண்டுகொண்டு வரவிருக்கும் பேராபத்தில் இருந்து தன் மக்களை காப்பாற்றுவாரா இல்லையா என்பதே கதை.
நமக்கு தெரிந்த விஷயத்தை தன் ஸ்டைலில் அழகாக காட்டியிருக்கிறார் மடோன் அஸ்வின். பல ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தில் இருந்து அந்த மக்களை புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புக்கு மாற்றும் காட்சியை மடோன் அஸ்வின் காட்டிய விதத்தில் தனித்து தெரிகிறார்.அந்த மக்களின் உணர்வுகளை நம்மை உணர வைக்கிறார் அஸ்வின். அடுக்குமாடி குடுயிருப்பில் பேட்ச் வேலை செய்யும் நபரான யோகி பாபுவை அருமையாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பேட்ச் வேலை செய்ய வரும் யோகி பாபு ஒரு தமிழர். தான் செய்யும் வேலையை வட நாட்டில் இருந்து வேலை தேடி வருபவர்கள் தான் அதிகம் செய்கிறார்கள். அதுவும் குறைந்த விலையில் செய்கிறார்கள் என்பதை உணர்கிறார்.
முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அவ்வப்போது நம்மை சிரிக்க வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அப்படி இல்லை. இரண்டாம் பாதியில் அதிகமாக சிரிக்க முடியவில்லை. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது.மேலும் பயங்கரமாக பில்ட்அப் கொடுக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரம் புஸ்ஸாகிவிடுகிறது.
சத்யா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர் தனக்கு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். மிஷ்கின் சிறப்பாக நடித்துள்ளார். சரிதாவின் நடிப்பு எதார்த்தமாக இருக்கிறது.இரண்டாம் பாதி சீரியஸாக மாறினாலும் படம் இறுதிவரை சுவாரஸ்யமாகவே உள்ளது.