ராயர் பரம்பரை விமர்சனம்
கோயம்புத்தூர் மாவட்டம் வேட்டைக்காரன்புதூரில் ஊரே நடுங்கும்படி அடியாட்களுடன் வாழ்ந்து வருகிறார் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த ராயர் (ஆனந்த ராஜ்). பல ஆண்டுகளுக்கு முன்பு தன் தங்கை (கஸ்தூரி) காதல் திருமணம் செய்துகொண்டு பிரிந்துவிட்டதால், காதல் மீது தீவிர வெறுப்பில் இருக்கிறார். தன் மகளை (சரண்யா) பொத்திப் பொத்தி வளர்க்கிறார். இந்நிலையில், “உங்கள் மகளுக்குக் காதல் திருமணம்தான் நடக்கும். அதுவும் உங்களின் சம்மதத்துடன்தான் நடக்கும்” என ராயரிடம் ஆரூடம் சொல்கிறார் ஜோசியர் (மனோபாலா).
மறுபுறம், அதே ஊருக்குக் குடிவரும் அன்பு (கிருஷ்ணா), பகுதி நேரமாகப் பாட்டு வாத்தியாராகவும், முழு நேரமாக, ‘காதலர்களைக் கண்டதும் பிரித்துவிடும் கட்சி’யின் பொதுச் செயலாளராகவும் ஜாலியாகத் திரிகிறார். அன்புக்கும் ராயர் மகளுக்கும் மோதல் ஆகிறது. இந்த மோதல் காதலானதா, ஜோசியரின் ஆரூடம் பலித்ததா, நாயகனின் பின்னணி என்ன, ராயரும் அவரின் தங்கையும் சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்குத் தன் காமெடி திரைக்கதையால் பதில் சொல்வதாக நினைத்து நம் காதுகளைப் பதம் பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராமநாத்.டி.
விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு பொள்ளாச்சியின் பசுமையைத் திரையில் கடத்த மட்டுமே பயன்பட்டிருக்கிறது. கணேஷ் ராகவேந்திராவின் இசையில், ‘அரபு நாட்டு ஈச்ச மரம்’ பாடம் மட்டும் ரசிக்க வைக்கிறது.
ஜமீன்தார் வில்லன், ஒரே மகள், அம்மா பாசம், கலகலப்பான கதாநாயகன், கதாநாயகன் – கதாநாயகி ‘செல்ல’ மோதல் எனத் தொடக்கக் காட்சிகளே, மொத்த திரைக்கதையையும் நம் கண்முன் காட்டிவிடுகிறது. இருந்தாலும், ‘ஏதோ செய்வார்கள்’ என்ற நம்பிக்கையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு உட்கார்ந்தால் தலைவலியே மிஞ்சுகிறது. நாம் பார்த்துப் பழகி, புளித்துப் போன திரைக்கதையை, காமெடியை மட்டுமே நம்பி களமிறக்கி இருக்கிறது படக்குழு. ஆனால், வழவழ என வசனங்களாகப் பேசியே காமெடியைக் கெடுத்திருக்கிறார்கள்.இரண்டாம் பாதி, கதாநாயகனின் பின்கதை, வில்லனுடனான மோதல், குடும்ப சென்டிமென்ட், சேஸிங் என நிறையத் திருப்பங்கள் இருந்தாலும், அவை எதுவுமே அழுத்தமாக எழுதப்படவோ இல்லை படமாக்கப்படவோ இல்லை. மேலும், பாடல்களும் நம்மைத் துரத்த, இரண்டாம் பாதி நீண்டுகொண்டே போகிறது.