பம்பர் விமர்சனம்
அரசியல்வாதியின் கொலையில் புலிப்பாண்டியும், அவரின் நண்பர்களும் சிக்குகிறார்கள். அந்த கொலையை அவர்கள் செய்யவில்லை. புதிதாக வந்திருக்கும் போலீஸ் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சபரிமலைக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். அந்த சபரிமலை பயணத்திற்கு பின் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் ஏற்படும் என்பது புலிப்பாண்டிக்கு தெரியாது.
கேரளாவில் வயதான இஸ்லாமியரிடம் இருந்து லாட்டரி டிக்கெட் வாங்குகிறார் புலிப்பாண்டி. அந்த டிக்கெட்டால் தன் வாழ்க்கையில் நல்லவிதமான மாற்றம் வரப் போகிறது என்பது தெரியாமல் அதை அதே இடத்தில் தொலைத்துவிடுகிறார்.
நேர்மையான அந்த லாட்டரி விற்பனையாளரோ அந்த டிக்கெட்டின் முக்கியத்துவத்தை விளக்கி அதை புலிப்பாண்டியிடம் கொடுக்க அவரை தேடிச் செல்கிறார். அதன் பிறகு நடப்பது தான் கதையின் முக்கிய விஷயம்.
உண்மையாக இருந்தால் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும் என்பதை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் செல்வகுமார். நேர்மையாக இருப்பதால் நமக்கு மட்டும் இல்லை அது சமூகத்திற்கும் நல்லது என்பதை புலிப்பாண்டி மற்றும் லாட்டரி விற்பனையாளர் மூலம் காட்டியிருக்கிறார்கள்.
சில தேவையில்லாத கதாபாத்திரங்கள், மெதுவாக செல்லும் திரைக்கதையால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய தருணங்கள் சாதாரணமாக கடந்து செல்கின்றன. முதல் பாதியில் காமெடி காட்சிகள் ஓரளவுக்கு கை கொடுத்தது. ஜி.பி. முத்துவின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. ஆனால் படத்தின் ஓட்டத்தில் அவை அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.
புலிப்பாண்டி வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுகிறது. அதை அவரிடம் சொல்லி லாட்டரி டிக்கெட்டை கொடுக்க கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் முதியவரின் நேர்மை நம்மை ஈர்க்கிறது. முன்பின் தெரியாக ஒருவருக்கு உதவி செய்ய அந்த நேர்மையான லாட்டரி விற்பனையாளர் இவ்வளவு செய்வது பாராட்டுக்குரியது. திரைக்கதை மட்டும் வலுவாக இருந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.
லாட்டரி விற்பனையாளராக நடித்த ஹரீஷ் மற்றும் புலிப்பாண்டியாக வந்த வெற்றி ஆகியோரின் நடிப்பு சிறப்பு. வெற்றியின் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. வெற்றியின் காதலியாக தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் ஷிவானி நாராயணன்.பம்பர் படம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் சில காட்சிகளை நீக்கியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.