இன் கார் விமர்சனம்
ஒரு நாளைக்கு இந்தியாவில் சுமார் 100 பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்ற புள்ளி விவரத்தினைச் சொல்கிறார் இயக்குநர் ஹர்ஷ் வர்தன். அதில் பல கடத்தல்கள் வெளியில் வருவதே இல்லை. அரை அடி தூரத்தில், பெண் போலீஸ் அமர்ந்திருக்கும்போது, கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் சாக்ஷி குலாட்டி எனும் இளம்பெண்ணைக் கடத்தி விடுகின்றனர். பகலில் நடக்கும் ஒரு கடத்தலையே கூட, அது கடத்தல்தான் என மூளை உள்வாங்கிச் செயற்படும் முன் கார் சிட்டாய்ப் பறந்து விடுகிறது.
சாலையில் வரும் ஒரு காரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி, காரைக் கடத்துகின்றனர் 3 கடத்தல்காரர்கள். அந்தக் கடத்தப்பட்ட காரிலே தான் சாக்ஷி குலாட்டி கடத்தப்படுகிறாள். பின் இருக்கையில், சாக்ஷி குலாட்டியின் இரு பக்கமும் கடத்தல்கார இளம்வயது சகோதரர்கள் இருவர், முன் இருக்கையில் அவரது மாமாவும் அமர்ந்துள்ளனர். படம், அதன் பின் காருக்குள்ளேயே நிகழ்கிறது.
முழுப் படமுமே, கடத்தப்படும் பெண்ணின் மன வேதனையைப் பிரதிபலிக்கவே எடுக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் பேசுவது, கோழியை எப்படி அனுபவிக்க வேண்டும் என அவர்கள் பேசுவது, விருந்திற்குப் பின் சாக்ஷியை என்ன செய்யவேண்டும் என கடத்தல்காரர்கள் எடுக்கும் முடிவு என ஒவ்வொரு நொடியும் சாக்ஷிக்கு ஏற்படும் மன உளைச்சலும், பதற்றமும், பயமும் அதிகரித்த வண்ணமே உள்ளன. முழுப் படமும், காருக்குள்ளேயே ஒரே மாதிரியான அவஸ்தையான டோனில் நகர்வது, நாயகிக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது போலும்.
டப்பிங் படத்தில் பெரும்பாலும் ஊர் பெயரையும் மாற்றிவிடுவார்கள். ஆனால் ஹரியானாவில் தான் கதை நிகழ்கிறது என்பதை வசனத்தில் மாற்றப்படவில்லை. இப்படியாக ஒரு விஷயத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஆறுதலடைய முடிகிறது.
சாக்ஷி குலாட்டியாக, இறுதிச்சுற்று ரித்திகா சிங் நடித்துள்ளார். கத்திக் கத்தி, ஓய்ந்து, அவஸ்தையுடன் ரேப்பிஸ்ட்களின் நடுவில் அமர்ந்திருக்கும் வலியை அழகாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார். சுபமாகப் படம் முடிந்தாலும், படத்தின் முடிவில் டேக் ஹோம் எமோஷன் என்பது சமூகச் சீர்கேடுகளை நினைத்துக் கோபமாகவும் இல்லாமல், சாக்ஷி குலாட்டி தப்பி விடுகிறார் என்ற மகிழ்ச்சியாகவும் இல்லாமல், மூச்சு முட்டும் அனுபவத்தை விட்டு அகலவே தோன்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இப்படியான பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் ஆணோ, பெண்ணோ அத்தனை சீக்கிரம் அந்த trauma-வில் இருந்து வெளியேறுவதில்லை எனும் உண்மையை மட்டும் முகத்தில் அறைந்தாற்போல் உணர உதவும் இப்படம்.
Acting
Story