Now Reading
பகாசூரன் திரை விமர்சனம்

பகாசூரன் திரை விமர்சனம்

சிவன் கோயிலில் பரதேசியைப் போல்வாழும் ராசு என்கிற பீமராசு (செல்வராகவன்) அவ்வப்போது சிலரைக் கொடூரமாகக் கொல்கிறார். கொல்லப்படும் அனைவரும் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவர்கள் அல்லது அத்தகைய துன்புறுத்தலுக்குத் துணைபோனவர்கள். இன்னொருபுறம் ஓய்வுபெற்ற மேஜர் அருள்வர்மன் (நட்டி ) குற்றவியல் விசாரணை தொடர்பாக யூடியூப் சேனல் நடத்திவருகிறார். அவர் அண்ணன்மகள், திடீரென தற்கொலை செய்துகொள்ளஅதை விசாரிக்கிறார். மொபைல் போன் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட்டதே, அவர் தற்கொலைக்குக் காரணம் என்பது தெரியவருகிறது. அதற்குப் பின் இயங்குபவர்களைக் கண்டறியும் வேட்டையைத் தொடங்குகிறார் அருள். பீமராசு செய்யும் கொலைகளுக்குக் காரணம் என்ன? அருளின் தேடுதல் வேட்டை என்ன ஆனது? இவை இரண்டும் இணையும் புள்ளி என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

இணையவழிப் பாலியல் தொழில் என்னும் சமகால அவலத்தைப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன்.ஜி. காதலின் பெயராலும் அந்தரங்கச் செயல்பாடுகளைப் படம்பிடித்து மிரட்டியும் பெண்களைத் தமதுபாலியல் இச்சைக்கு இணங்க வைப்பதோடுபாலியல் தொழிலிலும் ஈடுபட வைப்பவர்களின் வலைபின்னலை அம்பலப்படுத்தி இருக்கிறார். இளம் பெண்கள், பெற்றோர், சமூகம் அனைவரையும் இந்தப் பிரச்சினை குறித்து எச்சரித்திருக்கிறார்.

ஒரு வெகுஜனத் திரைக்கதை என்கிற அளவில் இரட்டைத் தடங்களாகப் பயணிக்கும் முதல் பாதி, த்ரில்லர் படத்துக்குத் தேவையான பரபரப்புடன் நகர்கிறது. உணர்ச்சிகரக் காட்சிகளும் உரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் சொல்லப்படும் கதையில் போதுமான அடர்த்தி இல்லை என்பதால் மெதுவாக நகர்ந்து அலுப்பூட்டுகிறது.

மிரட்டல், வற்புறுத்தலின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ அவமதிக்கும் வகையிலோ வசனமும் காட்சியும் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். வறுமையால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மீது பரிவு ஏற்படும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

See Also

செல்வராகவன் முதல் பாதியில் பழிவாங்கும் வெறியையும் இரண்டாம் பாதியில் தந்தையின் பாசத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நட்டியின் தேர்ந்த நடிப்பும் கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறது. காவல் ஆய்வாளராக வரும்தேவதர்ஷினி, பாலியல் தொழில் தரகர்களாக வரும் லயா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கின்றனர். சாம் சி.எஸ் இசையில் ‘அப்பப்பா’ பாடல் அதிர வைக்கிறது. பின்னணி இசை, கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது.

விளைவுகளை அறியாமல் பதின்பருவத்தினர் ஸ்மார்ட்போனில் மேற்கொள்ளும் அந்தரங்கச் செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் இந்த விஷயத்தில் பெற்றோர் அவர்களைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருப்பது இந்தப் படத்தின் குறைகளை மறக்க வைக்கிறது.

Pros

Acting

Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)