Now Reading
பொம்மை நாயகி விமர்சனம்

பொம்மை நாயகி விமர்சனம்

பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக ஆதிக்க சாதியை எதிர்த்து தந்தை ஒருவர் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் தீர்ப்பும் நீதியும் வெவ்வேறாக இருந்தால் அதுதான் ‘பொம்மை நாயகி’.

நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமைகொள்ளும் வேலு (யோகிபாபு) சாதாரண டீ மாஸ்டர். அன்றைக்கான கூலியில் நாட்களைக் கடத்தும் வேலு, மனைவி கயல்விழி (சுபத்ரா), மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி)யுடன் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டீக்கடை உரிமையாளர் அதனை விற்கும் நிலைக்கு வரும்போது, வேலுவுக்கு வேலை பறிபோகிறது. சொந்தமாக கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் பொம்மை நாயகி திருவிழா ஒன்றில் திடீரென காணாமல் போகிறார்.

தன் மகளைத் தேடிச் செல்லும் வேலு, மயக்கமடைந்த நிலையில் பொம்மை நாயகியை மீட்டெடுக்க, அவரை அந்த நிலைக்கு தள்ளியது யார்? என்ன நடந்தது? குற்றவாளிகளுக்கு தண்டனை கிட்டியதா? – இதையெல்லாம் சமூகத்தின் சாளரமாய் சொல்லியிருக்கும் படைப்புதான் ‘பொம்மை நாயகி’.

உருவகேலி, அசால்ட் கலாய், டைமிங் காமெடி, இப்படியான எந்த டெம்ப்ளேட்டிலும் சிக்காத ஒரு யோகிபாபுவை வார்த்தெடுத்திருக்கிறார் இயக்குநர் ஷான். ‘பொம்மை நாயகி’யின் யோகிபாபு அற்புதக் கலைஞனாக வடிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ளார். வறுமை நிழலாடும் முகம், கவலை தோய்ந்த உடல்மொழி, சிரிப்பில் வறட்சி என யதார்த்த நடிப்பில் அடித்தட்டு தந்தையை கண்முன் காட்டும் யோகிபாபு குலுங்கி அழும் இடத்தில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.

 

அவரது மனைவியாக சுபத்ரா நடிப்பில் அழுத்தம் கூட்ட, குழந்தை நட்சத்திரமான ஸ்ரீமதி தேர்ந்த நடிப்பால் தனித்து தெரிகிறார். அவர் வசனம் பேசும் இடங்களும், அதுக்கான டைமிங்கும் பார்வையாளர்களுக்கு எமோஷனல் டச். குறிப்பாக ‘நான் எதும் தப்பு பண்ணிடேனாப்பா’ என அவர் பேசும் இடம் உருகவைக்கின்றன. காவல் துறையை எதிர்த்து நிற்கும் கம்பீரமான கம்யூனிஸ்ட்டாக ஈர்க்கிறார் ஹரி (மெட்ராஸ் ஜானி). தவிர, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி யதார்த்த நடிப்பால் கவனிக்க வைக்கின்றனர்.

வறுமையோடியைந்த வாழ்வை கடக்கும் ஒருவனின் பகற்பொழுதின் அத்தனை அம்சங்களையும் அடுக்கி அடுக்கி அவரின் உலகத்திற்குள் நம்மை நுழைக்கிறார் இயக்குநர் ஷான். தன்னை ‘பாரத மாதா’ என பாவித்துக்கொள்ளும் ‘பொம்மை நாயகி’ கயவர்களால் காவு வாங்க முற்படும்போது, ‘பாரத மாதா’ என பெண்கள் பெயரால் போற்றப்படும் நாட்டில் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக பேசுகிறது படம். அதனை வைத்து இறுதியில் சொல்லப்படும் வசனமும் கச்சிதமான முடிவுக்கு வழிவகுக்கிறது.

படத்தின் இடையிடையே வரும் பாட்டி கதாபாத்திரம் அதன் எம்ஜிஆர் பாடல்களும் மெட்ராஸ் ஜானி கதாபாத்திரத்தை நினைவூட்டுகின்றன. கதையோடு பயணிக்கும் முஸ்லிம் கதாபாத்திரம், வழக்கறிஞராகவும், காவல் துறை உயரதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்படும் பெண்கள் நீதியின் பக்கம் நிற்பது, கம்யூனிஸ்ட் கட்சியினரின் நீதிக்கான போராட்டங்கள், ஊர் -சேரி பிரிவினை என படம் அயற்சியில்லாமல் எங்கேஜிங் திரைக்கதையுடன் கடப்பது பலம்.

See Also

‘ஒரு சமூகத்துல ஒரு பொண்ணு படிச்சா அந்த சமூகமே படிச்ச மாதிரி’, ‘சட்டமும் நீதிமன்றமும் நல்லதும் பண்ணுது கெட்டதும் பண்ணுது’, ‘அவன் உன்ன அடிமைன்னு நெனைக்கும்போது நீ அவனை எதிர்க்கிற ஆயுதமா மாறணும்’, ‘தீர்ப்பு கொடுத்ததுக்கு அப்றம் நீதியும் தரவேண்டியிருக்கு’, ‘போற உசுறு போராடியே போகட்டும்’ போன்ற வசனங்கள் ஈர்ப்பு.

குறிப்பாக நீதிபதியிடம் ஸ்ரீமதி பேசும் இடம் கைதட்டலை பெறுகிறது. மானம், கௌரவம் என்ற பெயரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுபவர்கள் மிரட்டப்படுவதையும், அதிலிருந்து மீள வேண்டிய தேவையையும், பெண் கல்வியின் அவசியத்தையும் பதிய வைக்கும் இடங்களுக்காக பாராட்டுகள்.

சுந்தரமூர்த்தி இசையில் ‘அடியே ராசாத்தி’ பாடலில் ‘எல்லோரும் 10 மாசம் தாண்டா இதுல சாதி சண்ட ஏன்டா’ போன்ற வரிகளும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. அதிசயராஜின் சிறு லென்ஸின் வழியே விரியும் பெருங்கடலும், யோகிபாபு – ஸ்ரீமதியின் ஈரத்தடங்களும் காட்சிப்படிமங்களாக தேங்குகின்றன.

ஒருகட்டத்தில் படம் முடிந்துவிட்டது என நினைக்கும்போது, அது தொடர்ந்து மற்றொரு க்ளைமாக்ஸுக்காக நீளும்போது அயற்சியும் நீள்கிறது. கூடவே பிரசார நெடியும். இறுதியில் யோகிபாபு செய்யும் செயல்கள் செயற்கை. எதிர்மறை கதாபாத்திரம் ஒன்று திடீரென திருந்துவதற்கான அழுத்தமான பின்புலமில்லை. எனினும், ஒட்டுமொத்தமாக கவனிக்கும்போது, ‘பொம்மை நாயகி’ பார்த்து அனுபவிக்கும் எங்கேஜிங்கான திரையனுபவம்!

Pros

Acting

Story

Cons

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)