Oh My Ghost Movie Review
சிந்தனை செய் என்ற திரைப்படத்தை இயக்கிய யுவன், இந்த ஓ மை கோஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை சன்னி லியோனி, தமிழ் நடிகர்கள் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் மற்றும் நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல் சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பிரபலமான பாலா, தங்கதுரை உள்ளிட்ட சிலரும் இடம்பெறுகின்றனர்.
ஒரு கிராமத்தில் ஆண்களை துன்புறுத்தும் பெண் ஆன்மா சுற்றுகிறது. அதை கட்டுப்படுத்த நாயகன் சதீஷ் வந்தால் மட்டுமே முடியும் என மந்திரவாதி கூறுகிறார். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களே ஓ மை கோஸ்ட் படத்தின் கதை.
அரசர் காலத்தில் அனகோண்டபுரம் என்ற பகுதியை சன்னி லியோனி ஆட்சி செய்து வருகிறார். அரசராக இருந்த தன்னுடைய தந்தையின் செயல்பாட்டால் ஆண்களை வெறுக்கிறார். அதனால் அந்த ஊரில் இருக்கும் ஆண்களை, அரண்மனைக்கு வர வைத்து அடித்து துன்புறுத்துகிறார். இதனால் கோபம் கொள்ளும் யோகி பாபு சூழ்ச்சி செய்து சன்னி லியோனியை கொன்று விடுகிறார். பல ஆண்டுகள் கடந்தாலும் பேயாக வந்து அந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்களை துன்புறுத்துகிறார். இந்த பேயை சென்னையில் வசிக்கும் நாயகன் சதீஷ் எப்படி கட்டுப்படுத்துகிறார் என்பது படத்தின் திரைக்கதை.
முதல் பாதியில் சதீஷ் இயக்குனராகுவதற்கு முயற்சிக்கிறார். அவருடன் ரமேஷ் திலக் பயணிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பேயின் கட்டுப்பாட்டிற்குள் இருவரும் சென்று விடுகிறார்கள். அந்த பேய் அவர்களை அனகோண்டாபுரத்திற்கு அழைத்து செல்கிறது. இதற்கு இடையில் நடக்கும் சில காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கின்றன.
சன்னி லியோனி காட்சிகள் இரண்டாவது பாதியிலேயே இடம்பெறுகின்றன. ஆனால் அந்த காட்சிகள் படத்துக்கு உறுதுணையாக இல்லை. மேலும் ஹாரர் காட்சிகளும் ரசிகர்களை பெரிதாக பயமுறுத்தவில்லை. இதனால் படத்தின் திரைக்கதை தொய்வடைந்துவிடுகிறது.
ஹாரர் திரைப்படங்களின் காட்சிகள் பார்பர்வகளை சில இடங்களிலாவது பயமுறுத்தும். ஆனால் இந்தப் படத்தில் பின்னணி இசையின் மூலம் மட்டுமே மிரள வைக்கலாம் என நினைத்திருப்பார்களோ என தோன்றுகிறது. ஆனால் அதுவும் ஒரு சத்தமாகவே கேட்கிறது. ஒரு இடத்தில் கூட பார்ப்பவர்களை பயமுறுத்தவில்லை.
ஓ மை கோஸ்ட் திரைப்படத்தை முதலில் அடல்ட் ஹாரர் திரைப்படமாக படமாக்கியுள்ளனர். ஆனால் படத்தொகுப்பு பணிகளில் அந்த காட்சிகளை நீக்கி விட்டு வெறும் ஹாரர் திரைப்படமாக கொடுக்க முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியில் வெளிபாடு திரையில் தெரிகிறது. எடுத்தது ஒன்று, கொடுத்தது ஒன்று. இதனால் சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை. இதுவே ஓ மை கோஸ்ட் படத்திற்கு பலவீனம்.
Direction
Comedy