Sembi Movie Review
மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் செம்பி திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதில் கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, சிறுமி நிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குறிச்சி நிலத்தில் வாழும் வீரத்தாய் மற்றும் அவளுடைய பேத்தி செம்பி ஆகியோரை மையமாக கொண்டே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தன் பாட்டியுடம் மகிழ்ச்சியாக வாழும் 10 வயது சிறுமி செம்பியை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிக்கின்றனர். ஆனால் பாட்டி செந்நாய் கடித்துவிட்டதாக மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு போன பிறகுதான் தன் பேத்திக்கு நடந்த கொடூரம் தெரியவருகிறது.
தன்னுடைய பேத்திக்கு வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்று வீரத்தாய் துடிக்கிறார். ஆனால் அவர் ஏமாற்றப்படுகிறார். அதன் பின் என்ன ஆனது? அந்த கொடூரன்கள் யார்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா? பணமும் அதிகாரமும் இருந்தால் உலகை இயக்கலாமா? செம்பிக்கு நியாயம் கிடைத்ததா? என்பதில் திரைக்கதையில் விரிகிறது.
அதிகாரத்திடம் இருந்து தப்பிக்க வீரத்தாயும் செம்பியும் ஒரு பேருந்தில் ஏறுகின்றனர். அதற்கு பின் படத்தின் காட்சிகள் முழுவதும் அந்த பேருந்துக்குள்ளேயே நடக்கின்றன. அதை மிக சாமர்த்தியமாகவும், சவாலுடனும் படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன்.
தம்பி ராமையாவிற்கு சொந்தமான அந்த பேருந்தில் பலதரப்பட்ட மனிதர்கள் பயணிக்கிறார்கள். செம்பிக்காக குரல் கொடுப்பவர்களை ஆதரிக்கும் நபராக அஸ்வின் குமார் அந்த பேருந்தில் பயணிக்கிறார். அதேபோல் போராட்டங்களை எதிர்த்து பேசும் நபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தன்னுடைய பேத்திக்கு நடந்த கொடுமைகளை எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள், சித்தரிக்கிறார்கள் என்பதை இயலாமையுடனும், கோபத்துடனும் கேட்டுக்கொண்டே பயணிக்கிறார் வீரத்தாய். அந்த பேருந்தில் நடக்கும் விவாதங்கள் சமூகத்தை சிந்திக்க தூண்டும் வகையிலேயே வசனம் எழுத முயற்சித்திருக்கிறார் பிரபு சாலமன்.
இது ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் பாட்டி மற்றும் பேத்தியை பிடிக்க கொடைக்கானல் முழுவதும் கார், வேன், பேருந்து என அனைத்தை காவல் துறையினர் சோதனை செய்கின்றனர். அவர்களிடம் இருந்து இருவரும் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்சிகள் உருவாக்கி விடுகின்றன.
போக்ஸோ சட்டம் எவ்வளவு முக்கியமானது, அதில் எப்படி தண்டனை பெற்று தறுவது என்பது போன்ற காட்சிகளும் உள்ளன.
இந்த சமூகத்தில் சிறிய உதவியை செய்துவிட்டு அதை விளம்பரமாக்க முயற்சிக்கும் எத்தனையோ நபர்களுக்கு மத்தியில், பெரிய உதவியை பெயர்கூட சொல்லாமல் செய்யும் நபர்கள் உள்ளனர் என்பதை காட்டியுள்ளார் இயக்குனர். அதிலும் உன்னிடம் செலுத்தப்படும் அன்பை நீ பிறரிடம் செலுத்து என்ற கருத்தையும் செம்பி மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் பிரபு சாலமன்.
இந்தப் படத்தில் கோவை சரளாவின் கதாபாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக படமாக்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என போராடும் போதும், காவல் துறை அதிகாரி வழக்கை வாபஸ் வாங்குமாறு மிரட்டும் இடத்தில் துளியும் பயம் இல்லாமல், நிச்சயம் போராடுவேன் என்று துணிச்சலுடன் நிற்கும் காட்சி இடம்பெறுகிறது. அந்த இடத்தில் இயக்குனரின் எண்ணத்தை அப்படியே தன்னுடைய நடிப்பில் வீரத்தாயாகவே வெளிப்படுத்தியுள்ளார் கோவை சரளா.
கோவை சரளா போலவே, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக சீரியஸாக செல்லும் திரைக்கதையில் தம்பி ராமையா காட்சிகள் சிரிக்க வைக்கின்றன.
பிரபு சாலமன் படங்களில் இடம்பெறும் பாடல்கள் பெரும் வெற்றியடையும். ஆனால் செம்பி படத்துல் அது மிஸ்ஸிங். இதில் இடம்பெறும் பாடல் மனதில் நிற்கவில்லை. கதைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதால் பாடலில் கவனம் செலுத்தவில்லையோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் படத்தின் சில காட்சிகளின் உணர்வுகளை நிவாஸ் கே.பிரசன்னாவின் பின்னணி இசையுடம் கடத்த நினைத்துள்ளார் பிரபு சாலமன். அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு பசுமையுடன் காட்சியளிக்கிறது. மேலும் பேருந்துக்குள் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை சவாலாக எடுத்துகொண்டு படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஜீவன்.
Direction
Acting
Music