கலகத் தலைவன் விமர்சனம்
கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக செயல்படும் Whistleblowerகள், நிறுவனத்தில் வளர்ச்சியடையாமல் குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கும் பெரும் மூளைகள் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார் நிறுவனர். கம்பெனிக்குள்ளே இருந்துகொண்டே ரகசியத்தை கசிய விடும் நபர்களையும் அவர்களால் பலனடையும் நபர்களையும் கண்டறிந்து அழிக்கவும், ரிப்போர்ட் கொடுக்கவும் நியமிக்கப்படுகிறார் கார்ப்பரேட்டுகளுக்காக அண்டர்கிரவுண்ட் வேலை செய்யும் பவர்ஃபுல் கில்லர் ஆரவ்.
கார்ப்பரேட்டுகளுக்கு தண்ணி காட்டும் சிங்கிள் மேன் உதயநிதி யார்..? அவர் ஏன் இதையெல்லாம் இவ்வலவு மெனக்கெட்டு செய்கிறார்..? அவருக்குப் பின்னால் இருப்பது யார்..? வேட்டை நாய்போல வெறிகொண்டு துரத்தும் ஆரவ்வின் கொலவெறி சேஸிங்கில் உதய் சிக்கினாரா… தப்பித்தாரா..? இப்படிப் பல கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் ‘கலகத் தலைவன்’. நாம் அதிகம் கேள்விப்படாத, சில கார்ப்பரேட்டுகளின் அத்துமீறல்களும் அதன் கொடுங்கரங்களும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சாமானியன் வரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும், கார்ப்பரேட்டுகளுக்காக வேலை செய்யும் கூலிப்படை மாஃபியாக்கள் பற்றியும் ஒரு சுவாரஸ்யமான விறுவிறு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.
கதாநாயகனாக உதயநிதிக்கு இந்தப் படம் செம மைலேஜ். அதிகம் பேசாமல் தன் அடையாளங்களை மறைத்து வாழும் அந்த திருமாறன் பாத்திரத்தில் கோபம், அழுகை, காதல், ஆக்ஷன் எனப் பல பரிமாணங்களில் மிளிர்கிறார். அவருக்குத் தகுந்தாற்போன்ற மிக இயல்பான ஆக்ஷன் காட்சிகளைக் கதையில் வடிவமைத்திருப்பது அந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக உதயநிதியின் ஆக்ஷனுக்கு உதவும் அவர் இளம்பிராயத்தின் சம்பவங்களைச் சொல்லலாம்.
படம் நெடுகிலும் ஹீரோவைவிட பவர்ஃபுல் வில்லனாக ‘பிக் பாஸ் புகழ்’ ஆரவ், மிரட்டி எடுத்திருக்கிறார். உதயநிதியைத் தேடித்தேடி நெருங்கும் காட்சிகள் சீட் நுனிக்கு நம்மை வரவழைக்கின்றன. தன்னிடம் சிக்கிய சந்தேக நபர்களை ஆரவ் கொடூரமாகச் சித்திரவதை செய்வது கொஞ்சம் ஓவர் வன்முறை. மிக முக்கியமான, ஆனால் ‘வழக்கமான’ ரோலில் கலையரசன் நன்கு நடித்திருக்கிறார். இவருக்கு என்ன நிகழும் என்பதை முன்கூட்டியே நம்மால் உணர முடிவது மட்டும் சின்ன சறுக்கல். இன்டர்வெல்லுக்கு முன் வரும் திருச்சி ரயில்வே ஸ்டேஷன் காட்சியும், க்ளைமாக்ஸ் காட்சியும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
கார்ப்பரேட் அத்துமீறலையும் அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையும், அதனால் பாதிக்கப்படும் ஓர் அப்பாவிக் குடும்பத்தையும் ஒரு புள்ளியில் நேர்த்தியாக இணைத்துக் கதை சொன்னதற்கே மகிழ்திருமேனிக்கு அழுத்தமாகக் கைகுலுக்கலாம்.