யசோதா திரைப்படம் விமர்சனம்
தனது தங்கையின் ஆப்ரேஷனுக்காக, சமந்தா வாடகைத்தாயாக மாறி கும்பல் ஒன்றுடன் செல்வது போல கதை தொடங்குகிறது. வாடகைத்தாய் தொழிலை வைத்து மிகப்பெரிய வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அந்த கும்பல், அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் வாடகைத்தாய்களோடு சமந்தாவையும் இணைக்கின்றனர். அங்கு செல்லும் சமந்தா கும்பல் செய்யும் குற்றத்தை கண்டறிய முயற்சிக்கிறார்.
ஒரு கட்டத்தில் வாடகைத்தாய் தொழிலை வைத்து அவர்கள் செய்யும் வியாபாரத்தை தெரிந்து கொள்கிறார். இதனை தெரிந்து கொண்ட அந்த கும்பல், சமந்தாவை கொல்ல துடிக்கிறது. இதற்கிடையில் ஹாலிவுட் நடிகை கொல்லப்பட்ட வழக்கு இவர்கள் செய்யும் வியாபரத்துடன் இணைகிறது. இந்த வழக்குக்கும், அந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு? இறுதியில் அவர்களின் பிடியில் இருந்து, சமந்தா எப்படி தப்பித்தார்..? அதற்காக அவர் எடுத்த அவதாரம் என்ன..? அங்கிருந்த வாடகைத்தாய்களின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களே ‘யசோதா’ படத்தின் மீதிக்கதை.
‘யூ டர்ன்’ படத்திற்கு பிறகு, சமந்தாவை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு வெளியாக இருந்ததால் ‘யசோதா’ படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா என்று கேட்டால் நிச்சயமாக பூர்த்தி செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.
வறுமையில் வாடும் அன்புள்ள அக்காவாக ஒரு பக்கம் நெகிழ வைக்கும் சமந்தா, ஆக்ஷன் அவதாரத்தில் மிரள வைக்கிறார். குறிப்பாக அவர் சண்டையிடும் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. வரலட்சுமி சரத்குமாருக்கு வழக்கமான வில்லி கதாபாத்திரம். ஆனால் அவர் இன்னும் கொஞ்சம் அதிகமான வில்லத்தனத்தை காண்பித்திருக்கலாம் என்று தோன்றியது.
இவர்கள் தவிர வரலட்சுமியின் காதலனாக வரும் உன்னி முகுந்தன், போலீஸ் அதிகாரியாக வரும் சத்ரு, அவர் குழுவை வழிநடத்தும் மூத்த அதிகாரியாக சம்பத் ராஜ் உள்ளிட்ட இதரகதாபாத்திரங்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கின்றன.
Acting
Story