காட்டேரி விமர்சனம்
திருவிழாவில் கலந்து கொள்ளும் கிராமத்தினர் அனைவரையும் யாரோ ஒருவர் மின்கம்பத்தை அறுத்துக் கொள்வதில் படம் தொடங்குகிறது.நிகழ்காலத்தில், காமினி எனும் இளம்பெண்ணைப் பணத்திற்காகக் கிரணின் குழு கடத்த, அவள் புதையல் இருக்கும் கிராமத்தைப் பற்றிச் சொல்ல, காமினியுடன் அந்தக் குழு அந்தக் கிராமத்திற்குப் புறப்படுகின்றனர். அந்த பேய்க் கிராமத்தில் மாட்டிக் கொள்ளும் அந்தக் குழுவிற்கு நடக்கும் வினோதமான நிகழ்வுகளே படத்தின் கதை.
புதையலைத் தேடி ஏழு பேர் குழு புறப்படுகிறது. கிரணாக வைபவ், வைபவின் மனைவி ஸ்வேதாவாக சோனம் பஜ்வா, காமினியாக ஆத்மிகா, கலி உருண்டையாக ரவி மரியா, கஜாவாக கருணாகரன், சங்கராக குட்டி கோபி, மற்றும் இவர்களுடன் ஒரு போலீஸ் அதிகாரி. அந்தக் கிராமம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது.
அந்தக் கிராமத்தில் இருந்து வெளியேற பேயாகத் திரியும் மாத்தம்மா நினைத்தால்தான் முடியுமெனத் தெரிய வருகிறது. குழு, மாத்தம்மாவிடம் சிக்குகிறது. மாத்தம்மாவாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார். பிறகு, புதையல் தேடி வந்த குழு காட்டேரிகளிடம் சிக்குகிறது. எப்படித் தப்புகிறார்கள் என்பதுதான் க்ளைமேக்ஸ்.
கிளைக்கதையாக வரும் கிணறு – புதையல் – காட்டேரி கதை ரசிக்க வைக்கிறது. தும்பாட் என்ற படத்தின் மையக்கருவை நினைவுபடுத்தும் சுவாரசியம் அதில் இருந்தும் கூட, இயக்குநர் டீகே அதை ஊறுகாய் போலவே பயன்படுத்தியுள்ளார். புதையலைப் பெட்டிப் பெட்டியாக அனுப்பும் காட்டேரிக்குத் தமிழ் சரியாகத் தெரியவில்லை. ‘கிணறை காய போடாதே’ என தப்பும் தவறுமாக எழுதி ரத்தக்காவு கேட்கிறது.
காட்சிகளாகத் தனித்தனியாகக் கோர்வையற்று இருப்பதால் படத்தை முழுவதுமாக என்ஜாய் செய்து ரசிக்க முடியாமல் சற்று அலைக்கழிக்கப் படுகிறோம். தேசிய விருது பெற்ற எடிட்டர் K.L.பிரவீனாலும் எந்த மேஜிக் செய்ய முடியாததற்கு திரைக்கதையின் பலவீனமே காரணம். அவரது முதற்படமான யாமிருக்க பயமே-வில், அந்த மேஜிக்கை அழகாகச் செய்திருப்பார் டீகே. காட்டேரியில், கதாபாத்திரங்களும் அதிகம். ஃப்ரேமில் இருந்து சிலர் காணாமல் போகிறார்கள், திடீரெனத் தோன்றி, ‘பேய் என்னைத் தூக்கிடுச்சுப்பா’ என மீண்டும் இணைந்து கொள்கிறார்கள். உச்சகட்டமாகக் கதாநாயகியின் பாத்திரமே அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கலி உருண்டை எனும் பாத்திரத்தில் டைட் டீ-ஷர்ட்டும் லெக்கின்ஸும் அணிந்திருக்கும் ரவி மரியாவும், பெண்களை வெறித்துப் பார்க்கும் கஜாவாக வரும் கருணாகரனும் இரட்டை அர்த்த வசனத்தில் பேசி நகைச்சுவைக்கு முயன்றுள்ளனர். சோனம் பஜ்வா கிளுகிளுப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் மலைகளும் பனியும் சூழ கண்களுக்கு இதமாய் உள்ளன. மற்றபடிக்கு, காட்டேரி அச்சுறுத்தவும் செய்யாமல், சிரிக்கவும் வைக்காமல், ஜபர்தஸ்த்தின்றி வற்றிய தோற்றத்தில் ஏமாற்றம் அளிக்கின்றது.