Now Reading
சீதா ராமம் -விமர்சனம்

சீதா ராமம் -விமர்சனம்

மீண்டும் தெலுங்கிலிருந்து தமிழில் வெளியாகியிருக்கும் ஒரு பிரமாண்டமான பான் இந்தியா படம் சீதா ராமம். இந்த தடவை ஃபேண்டசி அல்லது ஆக்ஷன் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு காதல் காவியமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெளியான பிரம்மாண்ட படங்கள் கொடுத்த சிலிர்ப்பை இப்படமும் கொடுத்ததா?

 

 

1960களில் பாகிஸ்தானின் தலைமை இராணுவ அதிகாரியாக இருக்கும் சச்சின் கடேகர் 20 வருடங்களுக்குப் பிறகு தான் சாகும் தருவாயில் இருக்கும் போது ஒரு பழைய கடிதத்தை தன் பேத்தி ராஷ்மிகாவிடம் கொடுத்து அதை இந்தியாவில் இருக்கும் சீதா மகாலட்சுமி என்ற பெண்ணிடம் சென்று சேர்க்கும்படி கூறிவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு சீதா மகாலட்சுமியை தேடி இந்தியாவில் சுற்றித் திரிகிறார் ராஷ்மிகா. முகவரியே இல்லாத சீதா மகாலட்சுமியை தேடி இந்தியா முழுவதும் அலைந்து திரியும் பயணத்தில் சீதா மகாலட்சுமிக்கும் இந்திய ராணுவ லெப்டினன்ட் (துல்கர் சல்மான்) ராமுக்கும் இடையேயான காதலைப் பற்றி ராஷ்மிகா தெரிந்து கொள்கிறார். இதையடுத்து முகவரியே இல்லாத சீதா லட்சுமியை ராஷ்மிகா கண்டுபிடித்து கடிதத்தை தாத்தாவின் ஆசைப்படி ஒப்படைத்தாரா, இல்லையா? லெப்டினன்ட் ராம் என்னவானார்? என்பதே இக்காதல் காவியத்தின் மீதி கதை.

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகச்சிறந்த ரொமான்டிக் லவ் ஸ்டோரியை கொடுத்துள்ளார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. ஆல் டைம் ஃபேவரிட் காதல் படங்கள் என ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டால் அதில் இடம் பிடிக்கும் திரைப்படங்களுக்குள் ஒரு படமாக இப்படம் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவு மனதை உருக வைக்கும் ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியை சிறப்பான முறையில் அழகான கவிதை போல் கொடுத்து பார்ப்பவர்கள் மனதை வருடி இருக்கிறார் இயக்குநர் ஹனு ராகவாபுடி. குறிப்பாக இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வை கொடுக்காமல் நேரடி தமிழ்ப்படம் போன்ற உணர்வை கொடுக்க வசனம், உதட்டசைவு என பலவற்றில் மெனகெட்டுள்ளது படக்குழு. ஒரு சிறந்த காதல் படத்திற்கு என்னென்ன தேவையோ அதை சரியான கலவையில் சிறப்பாக கொடுத்து, வசனமும் திரைக்கதையும், காட்சியமைப்புகளும் ரசிக்கத்தக்க வகையில் கச்சிதமாக அமைந்துள்ளன. மேலும், இப்படத்தின் கதாபாத்திர தேர்வும், கதை நடக்கும் காலத்திற்கு ஏற்ப அக்கதாபாத்திரங்களின் நடை உடை பாவனைகளை அமைத்த விதமும் பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது படத்தின் மேக்கிங். இதற்காக ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், கலை இயக்குநரும் ஒருசேர போட்டிருக்கும் உழைப்பு படத்தை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதேபோல் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் அளித்து அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதை, வசனத்தையும் அழகாக அமைத்து கதைக்குள் இருக்கும் பிரம்மாண்டத்தையும் அழகாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.

 

 

ராணுவ லெப்டினன்ட் ராமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக நடித்ததை காட்டிலும் லவ்வர் பாயாக நடித்திருக்கும் நடிப்பில் செஞ்சுரி அடித்துள்ளார். காதல் வந்த இளைஞரின் உணர்ச்சிகளை தன் முகபாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி ராம் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிக்க வைத்துள்ளார். மிகவும் கடினமான காட்சிகளில் கூட இவரின் அசால்ட்டான நடிப்பு யதார்த்தமாக அமைந்து நடிப்பதே தெரியாத அளவிற்கு அழகாக அமைந்துள்ளது. இப்படத்தின் மிகப்பெரிய பலமே நாயகி மிருணால் தாக்கூர் தான். இவர் எந்த காட்சியில், எந்த பிரேமில், எந்த உடையில் பார்த்தாலும் அழகாக தெரிகிறார், அம்சமாக நடித்திருக்கிறார். குறிப்பாக விண்டேஜ் காட்சிகளாக நகரும் இப்படத்தில், அந்த காலகட்டத்தில் இருக்கும் பெண்களின் நடை உடை பாவனைகளை மிக அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே மாறியிருக்கிறார். இவருக்கு விருதுகள் நிச்சயம்.

See Also

 

பாகிஸ்தான் பெண்ணாக வரும் ராஷ்மிகா மந்தானா துடுக்கான பெண்ணாக நடித்திருக்கிறார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் கோபப்படும் இடங்களில் சரியான அளவில் கோபப்பட்டும், இறக்கப்படும் இடங்களில் சரியான அளவில் இறக்கப்பட்டும், நெகிழ்ச்சி அடையும் இடங்களில் சரியான அளவில் நெகிழ்ச்சியாக நடித்தும் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். கூடவே இவரது நண்பராக நடித்திருக்கும் நடிகர் தருண் பாஸ்கர் ஆங்காங்கே சில கலகலப்பான பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். துல்கர் சல்மானின் நண்பராக வரும் வெண்ணிலா கிஷோர் தனக்கு கிடைத்த ஸ்பேசில் சரியாக விளையாடி நல்ல  நகைச்சுவை செய்து சிரிக்க வைத்துள்ளார். துல்கர் உடன் இன்னொரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் எர்லகட்டா சுமந்த் குமார் நடிப்பால் காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பூமிகா, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையில் சில பாடல்கள் மட்டும் தரம். பின்னணி இசை உலகத்தரம். பிஎஸ் வினோத் & ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விண்டேஜ் காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்து பிரமிப்பை கூட்டியுள்ளது. குறிப்பாக ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், மிருணாள் தாகூர் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகளும் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும், அதேசமயம் மிக அழகாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பரவசம் கொடுத்துள்ளது. இப்படm ஏற்படுத்தும் பிரமிப்புக்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது இப்படத்தின் கலை இயக்கம். 1960-களில் ஆரம்பித்து 1980 களில் நடக்கும் கதையாக இருப்பதால் அக்காலகட்டத்தை அப்படியே கண்முன் பிரதிபலிக்க சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார் கலை இயக்குநர். அதேபோல, அக்காலகட்டத்திற்கு ஏற்றார்போல் அழகான உடைகளை சரியான கலவையில் கொடுத்து படத்தை இன்னமும் மெருகேற்றி உள்ளார் காஸ்ட்யூம் டிசைனர்.

ஆக்ஷன் படங்கள், வரலாற்று படங்கள், கேங்ஸ்டர் படங்கள் என பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் பான் இந்தியா படங்களின் வரிசையில் பிரம்மாண்ட காதல் காவியமாக வெளியாகியிருக்கும் சீதாராமம் திரைப்படம் தவிர்க்க முடியாத படமாக மாறியிருக்கிறது. படத்தின் பாடல்களும், படத்தின் நீளமும் படத்திற்கு சற்று மைனசாக பார்க்கப்பட்டாலும் காட்சிகளுக்குள்ளும், கதைக்குள்ளும், காதலுக்குள்ளும் இருந்த பிரம்மாண்டத்தை அழகாக வெளிப்படுத்தி மைனஸ் விஷயங்களை மறக்கடிக்கச் செய்துள்ளது இந்த சீதாராமம் திரைப்படம்.

Pros
Cons
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)