யோகி பாபு படத்துக்கு 2 தேசிய விருதுகள்
யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இந்தப் படம் 2 தேசிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், வசன கர்த்தாவுக்கான விருதும் மண்டேலா திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. இதனைத் தொர்ந்து மண்டேலா இயக்குநருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பஞ்சாயத்து தேர்தலை மையமாக வைத்து, சமூகத்தில் இருக்கும் தேர்தல் நடைமுறையையும், அதன் பெயரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேலிக்கூத்துகளையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருப்பார் இயக்குநர்.
இளிச்சவாயன் என்ற கதாப்பாத்திரமாக வாழ்ந்திருந்த யோகிபாபு தன்னுடைய ஒற்றை வாக்கை வைத்து, வாக்கின் மதிப்பை மக்களுக்கு உணர்த்தியிருப்பார். சாதியால் பிரிந்து கிடக்கும் ஊரில் பஞ்சாயத்து தலைவரை தீர்மானிக்கும் ஒரே ஒரு வாக்கு இளிச்சவாயனிடம் இருக்கும். இரு தரப்பிலும் போட்டியிட்டவர்கள் சமமான வாக்கைப் பெற, இளிச்சவாயனின் ஒற்றை வாக்கை பெறுபவர்கள் பஞ்சாயத்து தலைவராக முடியும் என்ற சூழல் உருவாகும். அப்போது, இரு தரப்பினரும் இளிச்சவாயனிடம் முறையிட, அந்த ஒற்றை வாக்கை பணத்துக்கு விற்காமல், அதனை வைத்து என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுவார்.
இடையிடையே அரசியல் வசனங்கள் எல்லாம் சமூகத்தில் நிலவும் சூழலை மூக்குடைக்கும் வகையில் லாவகமாக வந்துவிழும். எதார்த்தை அரசியல் நையாண்டியாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்காக மடோனா அஸ்வினுக்கு அப்போதே பாராட்டுகள் கிடைத்தது. இப்போது தேசிய விருது, அவருடைய முயற்சிக்கு மேலும் வெளிச்சம் பாய்ச்சிருக்கிறது. இயக்குநர் மடோன் அஸ்வின் ‘மாவீரன்’ படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் லீட் ரோலில் நடிக்கிறார். படத்தின் தலைப்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 2 தேசிய விருதுகளையும் அவர் பெற்றிருப்பதால் மாவீரன் எப்படியான பாய்ச்சலை கொடுக்கப்போகிறான் என்ற எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.