அபிஷேக்தான் வந்தார் – இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் உருக்கம்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் பார்த்திபனும் ஒருவர்.புதிய பாதை என்ற தனது முதல் படத்தின் மூலமே தனி முத்திரையை பதித்தவர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற படத்தை கதையே இல்லாமல் எடுத்தது, ஒத்த செருப்பு படத்தில் ஒற்றை கதாபாத்திரத்தை மட்டும் திரையில் உலாவவிட்டது அவரது வித்தியாச முயற்சி அவர் தற்போது இயக்கிவரும் இரவின் நிழல் படத்திலும் தொடர்ந்திருக்கிறது.
சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பார்த்திபனே நடித்திருக்கிறார்.
இதன் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன்பு வெளியான சூழலில் நேற்று படத்தின் இசை வெளியானது. மேலும் கான்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது.
நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன், ஏ.ஆர். ரஹ்மான், அபிஷேக் பச்சன், சரத்குமார், ராதிகா மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பார்த்திபன், “ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டியது அவசியம். இந்த விழாவிற்கு பல நண்பர்களை அழைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என கூறினார்கள்.
இருந்தபோதிலும் பாலிவுட்டிலிருந்து நண்பர் அபிஷேக் பச்சன் வந்து சிறப்பித்துள்ளார். நான் அவரை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தைதான் இயக்கியுள்ளேன். இருந்தாலும் இந்த நிகழ்வுக்காக அவர் வந்துள்ளார்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அபிஷேக் பச்சன், “பார்த்திபன் இயக்கத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன். அவர் மிகச் சிறந்த படைப்பாளி” என்று பேசினார்.