விக்ரம் திரைவிமர்சனம்! திகட்டாத ஆக்ஷன் தெறிக்கும் அனுபவம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.தனது சிஷ்யனான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.
படத்தின் ஆரம்பத்தில் முகமூடி போட்ட கும்பல் சில அரசு அதிகாரிகளை கொடூரமாக கொலை செய்கின்றனர். போதைப்பொருள்கள் கொண்ட இரண்டு கண்டைனரை போலீசார் கைப்பற்றி அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுகின்றனர். இதனை அடைய வில்லன் கும்பல் ஒருபக்கம் தேடுகிறது, மறுபக்கம் முகமூடி போட்ட கொலைகாரர்கள் யார் என்பதை போலீஸ் தேடுகிறது. இறுதியில் இரண்டையும் கண்டுபிடித்தார்களா என்பதே விக்ரம் படத்தின் ஒன்லைன். விக்ரம் படத்தை கமல்ஹாசன் படம் என்றோ விஜய் சேதுபதி அல்லது பகத் பாசில் படம் என்றும் கூறிவிட முடியாது, மாறாக இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.
1986-ம் ஆண்டு வெளியான கமலின் முந்தைய ‘விக்ரம்’ படத்துடன் தொடர்புபடுத்திய விதம் ஈர்க்கிறது. இதுபோல சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள் காத்திருக்கிறது. ‘கைதி’ படத்தை முன்னதாக லோகேஷ் கனகராஜ் பார்க்கச் சொன்னதற்கான காரணம் திரையில் தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான ஸ்கோப்புகளை கொடுத்திருக்கிறார் லோகேஷ். தான் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்பதை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் லோகேஷ்.
ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய கடின உழைப்பை கொடுத்துள்ளார். தன்னுடைய ஆஸ்தான குருவான கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு படத்தை வேறு எந்த ஒரு இயக்குனர் ஆளும் கொடுத்திருக்க முடியாது. கமல்ஹாசனுக்கும் அவரது சினிமா கரியரில் விக்ரம் படம் மிகப் பெரிய மைல் கல்லாக இருக்கும். ஒருபுறம் கமல்ஹாசன் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த மறுபுறம் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் போன்ற நடிப்பு அரக்கர்கள் தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர். விக்ரம் படத்தின் முதல் பாதி முழுக்கவே பகத் பாசில் ஸ்கோர் செய்கிறார். விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தனித்துவமாக எழுதப்பட்டுள்ளது, கைதி படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் இடம்பெற்ற சில கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இடைவேளை காட்சி, கமாண்டோஸ் அறிமுகம், க்ளைமாக்ஸுக்கு முன்னதாக நடக்கும் சண்டை என ஒவ்வொரு காட்சியும் கூஸ்பம்ஸ் உள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி இசையமைப்பாளர் அனிருத் தனது இருமடங்கு உழைப்பை இப்படத்திற்கு கொடுத்துள்ளார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அனிருத். சிறப்பு கதாபாத்திரத்தில் வரும் சூர்யா விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு லீட் கொடுக்கிறார். கதையோடு ஒன்றி விடும் அளவிற்கு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.