சிம்புவின் அடுத்த படம் டிராப்?
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சிம்புவின் கோலிவுட் கிராப் உச்சத்துக்கு சென்றது. சுரேஷ் காமாட்சி தயாரித்த அந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கினார். டைம் லூப் கான்செப்டில் உருவான மாநாடு, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூல் மழையில் நனைந்தது. படம் எடுத்தது முதல் ரிலீஸ் வரை என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட மாநாடு, ரிலீஸூக்குப் பிறகு தாறுமாறாக ஓடியது.
அண்மையில் படத்தின் வசூல் குறித்து டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் வசூல் 117 கோடியைக் கடந்து விட்டதாக தெரிவித்தார். மாநாடு வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சிம்பு, அதன் தொடர்ச்சியாக பத்து தல படத்திலும் நடித்தார். அடுத்தடுத்து சூட்டிங் என பிஸியாக இருந்தநிலையில், தந்தை டி.ராஜேந்தர் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டது.அதனால் அவருடைய சிகிச்சையில் சிம்பு கவனம் செலுத்தி வருவதால் பத்து தல படத்தின் சூட்டிங் தாமதமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநேரத்தில் பத்துதல படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சூட்டிங் தள்ளிப்போய் இருக்கும் சூழலில், சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை டிராப் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல், கொரோனா குமார் படத்தை இயக்க இருந்தார். அந்தப் படத்தில் லீட் ரோலில் சிம்பு நடிக்க இருந்த நிலையில், படத்தை டிராப் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷிடம் இது குறித்து தெரிவித்துவிட்டதாகவும், வேறொரு படத்தில் நடித்து தர சிம்பு தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தயாரிப்பு நிறுவனம் புதிய இயக்குநர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறது. லிங்குசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.