ஆஸ்கருக்கு போன முதல் தமிழ் படம்
சினிமா துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படும் அந்த ஆஸ்கர் விருதுக்கு முதன் முதலாக சென்ற தமிழ் படம் பற்றி
இங்கு காண்போம். 1969 ஆம் ஆண்டு ஏ சி திருலோக்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வமகன். அதில் சிவாஜி அப்பா, மகன் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். முகத்தில் இருக்கும் தழும்பின் காரணமாக தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் சிவாஜிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும்.
அதில் ஒரு குழந்தை அதே தழும்புடன் பிறந்திருப்பதை பார்த்த சிவாஜி குழந்தையை வேறு ஒருவரிடம் கொடுத்து விடுவார். பின்னாளில் சிவாஜியின் உருவ ஒற்றுமையுடன் இரு குழந்தைகளும் வளர்வார்கள். அதில் பெற்றவர்களை விட்டு பிரிந்திருக்கும் சிவாஜி அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு தன் அப்பாவை காண வருவார்.
அந்த காட்சியில் சிவாஜியின் நடிப்பு அவ்வளவு உணர்ச்சிகரமாகவும், எதார்த்தமாகவும் இருக்கும். அதுவே பார்க்கும் ரசிகர்களையும் கண்ணீர் விட்டு அழ செய்தது. பிறகு அந்த சிவாஜி தன் குடும்பத்துடன் இணைந்தாரா என்பதை அப்படம் அழகாக காட்டி இருக்கும்.
அந்த காலத்தில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்றும் கூட அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது. இந்த படம் தான் முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.அது மட்டுமல்லாமல் இப்படம் தியேட்டர்களில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. மேலும் தமிழக அரசின் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றது. அதில் சிறந்த நடிப்பிற்கான விருதை சிவாஜி பெற்றது குறிப்பிடத்தக்கது.